கோர விபத்து : தாத்தா,பேரன்,பேத்தி என மூவர் பலியான துயரம்
எல்பிட்டிய-அவித்தாவ பிரதான வீதியில் கட்டபால கிறிஸ்துவ தேவாலயத்திற்கு முன்பாக முச்சக்கரவண்டி ஒன்று கொள்கலனுடன் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக எல்பிட்டிய காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதியான எல்பிட்டிய, வல்லம்பகல, சுகதபால மாவத்தையைச் சேர்ந்த கலிங்க நிஹால் சோமரத்ன என்ற 68 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையும் அவரது பேரன் தினுல பெர்னாண்டோ (10) மற்றும் பேத்தி செனுலி பெர்னாண்டோ (07) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் மூவர் படுகாயம்
முச்சக்கரவண்டியில் பயணித்த உயிரிழந்தவரின் மனைவி, மகள் மற்றும் 18 வயது பேரன் ஆகியோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறையினர் மேலதிக விசாரணை
விபத்து தொடர்பில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், எல்பிட்டிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.