மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட பாடசாலை மாணவன் உயிரிழப்பு
குருநாகல் – கிரியுல்ல பிரதேசத்தில் சிங்கள தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட பாடசாலை மாணவனொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் (21.04.2024) இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
வத்தேவ அமரகொட பிரதேச அத்தியட்சகரின் மகனான ரவிடு டில்ஷான் என்ற பாடசாலை மாணவனே உயிரிழந்துள்ளதாக கிரியுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வத்தேவ சனசமூக மண்டபத்திற்கு அருகில் நேற்று (21) காலை ஆரம்பமான மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட இம்மாணவன் சுமார் 500 மீற்றர் தூரத்திலுள்ள வாய்க்காலில் தவறி விழுந்ததாக புத்தாண்டு விழாவை காண சென்ற சிலர் பொலிஸ் விசாரணையின் போது கூறியுள்ளனர்.
அத்துடன் போட்டி நடந்த நேரத்தில் அப்பகுதியில் வெயில் அதிகமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.