இலங்கைக்கு கிடைத்துள்ள பல பில்லியன் ரூபா! பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்
அரசாங்க வருமானம் குறைந்தமையே பொருளாதார நெருக்கடிக்கு காரணம் எனவும் 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் எதிர்பார்த்த அரச வருமானத்தை விட அதிகமாக கிடைத்துள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
வருவாய் இலக்கு
இதேவேளை முதல் காலாண்டில் இந்த இலக்குகளை தாண்டியமை மற்றும் வருமான முறை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, 2024 ஆம் ஆண்டு வருவாய் இலக்குகளை எட்ட முடியும் ஒரு ஆண்டாக அமையும் என தெரிவித்துள்ளார்.
இதன்படி அந்த காலப்பகுதியில் நாட்டின் பிரதான வருமானம் ஈட்டும் இலங்கை சுங்க, கலால் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்களங்கள் 834 பில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அது எதிர்பார்க்கப்பட்ட வருமானமான 787 பில்லியன் ரூபாவை விட 6% அதிகம் என அமைச்சர் குறிப்பிட்டார்.
உள்நாட்டு இறைவரி
சுங்கத் திணைக்களம் 353 பில்லியன் ரூபா இலக்கை எட்டியுள்ளதாகவும், கலால் திணைக்களம் 96% வருமானத்துடன் 51 பில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட 381 பில்லியன் ரூபாவை விட 13% அதிகரிப்புடன் 430 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2024 ஆம் ஆண்டில் அரசாங்கம் 4,106 பில்லியன் ரூபா வருமானத்தை எதிர்பார்க்கிறது, அதில் 93% வரி வருமானம் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.