எபோலா தொற்று உருவான குகை: புதிய பெருந்தொற்று தொடர்பில் நிபுணர்கள் எச்சரிக்கை
கென்யாவில்(Kenya) உள்ள மவுண்ட் எல்கான் தேசிய பூங்காவில் அமைந்துள்ள உலகின் மிக ஆபத்தான கிடும் குகை(cave Kitum) உலகின் அடுத்த தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு(World Health Organization) எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த கிடும் குகையானது மனித வரலாற்றில் மிகவும் கொடிய வைரஸ்களின் இருப்பிடமாக மாறியுள்ளது என்றே நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.
அத்துடன் உயிர் ஆபத்தை ஏற்படுத்தியுள்ள எபோலா(Ebola Virus) மற்றும் மார்பர்க் வைரஸ் (Marburg virus)கிருமிகள் அங்கு தோன்றியதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, எச்சரிக்கை விடுத்துள்ள உலக சுகாதார அமைப்பு, கொரோனா பெருந்தொற்றை அடுத்து மார்பர்க் வைரஸ் பெருந்தொற்றாக மாற வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளது.
மார்பர்க் வைரஸ்
மார்பர்க் வைரஸ் என்பது இரத்தக்கசிவு காய்ச்சலை ஏற்படுத்தும் மிகவும் கொடிய நோய் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இந்த நோய் உடலின் செயல்பாட்டுத் திறனைக் குறைத்து இருதய அமைப்புக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் இறப்பு விகிதம் 88 சதவீதம் கொண்ட இந்த வைரஸ் எபோலாவை ஏற்படுத்தும் வைரஸுடன் தொடர்புடையது என்றும் தெரிவிக்கபடுகின்றது.
இதேவேளை பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொண்ட பொருட்களைத் தொடுவதன் மூலம் இந்த நோய் மற்றவர்களுக்கு பரவுவதாகவும் நோயால் பாதிக்கப்பட்டு 3 வாரங்களுக்கு பின்னரே, நோயாளிக்கு அறிகுறிகள் தெரியவரும் எனவும் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
மார்பர்க் வைரஸின் அறிகுறிகள் பெரும்பாலும் மலேரியா மற்றும் எபோலாவை ஒத்திருக்கும் என்றும் பாதிப்பின் அடுத்த கட்டத்தில் பிறப்புறுப்பு, கண்கள், மூக்கு மற்றும் ஈறுகளில் இருந்து இரத்தப்போக்கு ஏற்படும் என கூறப்படுகின்றது.
மேலும் இதுவரை இந்த வைரஸுக்கு தடுப்பூசிகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுடன் மருந்துகள் மற்றும் திரவங்கள் மூலம் நோய் அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.