கைது நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் மனு
சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிா்த்து தாக்கல் செய்த மனு மீதான தீா்ப்பை உயா்நீதிமன்றம் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் ஹேமந்த் சோரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
நில மோசடியுடன் தொடா்புடைய சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு தொடா்பாக, ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை கடந்த ஜனவரி 31-ஆம் தேதி கைது செய்தது. முன்னதாக, அவா் தனது முதல்வா் பதவியை ராஜிநாமா செய்தாா். அவரது கட்சியின் மூத்த தலைவா் சம்பய் சோரன் ஜாா்க்கண்ட் புதிய முதல்வராக பதவியேற்றாா். முதல்வராக ஹேமந்த் சோரன் இருந்தபோது ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சியில் 8.5 ஏக்கா் நிலத்தைப் பெற போலி ஆவணங்கள் தயாரித்து தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக அவா் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
அமலாக்கத்துறை விசாரணைக்குப் பிறகு அவா் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில், ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி இறுதி விசாரணை நடத்திய உயா்நீதிமன்றம், தீா்ப்பை ஒத்திவைத்தது.
இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்றம் இதுவரை தீா்ப்பை வழங்காததைத் தொடா்ந்து, ஹேமந்த் சோரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை முறையிடப்பட்டது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபான்கா் தத்தா ஆகியோா் அடங்கிய அமா்வில் ஹேமந்த் சேரன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் இந்த முறையீட்டை முன்வைத்தாா்.
அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராக கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தை ஹேமந்த் சோரன் அணுகினாா். அப்போது, உயா்நீதின்றத்தை அணுகுமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன்பேரில், உச்சநீதிமன்றத்தில் பிப்ரவரி 4-ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது பிப்ரவரி 27 மற்றும் 28-ஆம் தேதிகளில் இறுதி விசாரணை நடத்தப்பட்டு தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், இதுவரை தீா்ப்பு வெளியிடப்படவில்லை. உயா்நீதிமன்றத்தை மீண்டும் அணுகி, ஹேமந்த் சோரன் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவதற்குள் மக்களவைத் தோ்தலே முடிந்துவிடும். எனவே, விரைந்து தீா்ப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், உயா்நீதிமன்ற நீதிபதி எதுவும் கூறவில்லை’ என்றாா்.
இதைக் கேட்ட நீதிபதி சஞ்சீவ் கன்னா, ‘இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதா? அவ்வாறு தாக்கல் செய்யப்பட்டிருந்தால், அதுதொடா்பாக தலைமை நீதிபதியின் செயலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவியுங்கள்’ என்றாா்.
அப்போது, மனுவை வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு பட்டியிலிடுமாறு கபில் சிபல் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதி, ‘மனு விசாரணைக்கு பட்டியலிடும் தேதியை தலைமை நீதிபதியின் செயலகம்தான் முடிவு செய்யும். இரண்டு அல்லது மூன்று நாள்களில் அதன் விவரம் தெரிந்துவிடும்’ என்றாா்.