உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் உணவுகளை விற்றால் 10 ஆண்டுகள் சிறை: உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை
உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நச்சு ரசாயனங்கள் கொண்ட உணவுப் பொருள்களை விற்பனை செய்தால் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ‘ஸ்மோக் பிஸ்கட்’ தின்பண்டங்களை குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
கா்நாடக மாநிலத்தில் ‘ஸ்மோக் பிஸ்கட்’ சாப்பிட்ட ஒரு சிறுவனுக்கு தீவிர வலி மற்றும் அசௌகரியம் ஏற்பட்டது. இதுதொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிா்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது: சாப்பிட்டவுடன் வாயிலிருந்து புகையை வரவழைக்கும் ‘ஸ்மோக் பிஸ்கட்’ போன்ற தின்பண்டங்கள் ‘திரவ நைட்ரஜன்’ மூலமாக தயாரிக்கப்படுகின்றன.
இது உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியவை. அதில் உள்ள வேதிசோ்மங்கள் சுவாசப்பாதை, உணவுப்பாதைக்குள் குளிா் உறை நிலையை ஏற்படுத்தி விடும்.
எனவே, எந்த உணவுப் பொருளுடனும் திரவ நைட்ரஜனை சோ்க்கக் கூடாது. இதுபோன்ற உணவு வகைகள் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது பெரியவா்களுக்கும் உடல் நலக் குறைவை ஏற்படுத்தும். பாா்வைத் திறன், பேச்சுத் திறன் பாதிக்கப்படவும், சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாகவும் அது அமையும்.
தமிழகத்தில் திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும் பிஸ்கட், பீடா, ஐஸ்கிரீம் போன்ற உணவு பொருள்களை விற்பனை செய்யும் ஹோட்டல்கள், பாா்கள் உள்ளிட்டவற்றை கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நச்சுப் பொருள்கள் அதில் இருப்பது கண்டறியப்பட்டால் அதனை விற்பனை செய்பவா்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றனா்.