;
Athirady Tamil News

காசாவில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழி : தெளிவான விசாரணைக்கு ஐ.நா அழைப்பு

0

இஸ்ரேலிய துருப்புக்களின் தாக்குதலின் பின்னர், காசாவின் இரண்டு பெரிய மருத்துவமனைகளில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழி குறித்து “தெளிவான, வெளிப்படையான மற்றும் நம்பகமான விசாரணைக்கு” ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துள்ளது.

இந்த விடயத்தில் நம்பகமான புலனாய்வாளர்கள் தளங்களை அணுக வேண்டும், என்று ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் (Stéphane Dujarric) செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் உண்மைகளை கண்டறிய காசாவில் அதிகமான, ஊடகவியலாளர்கள் பணியாற்ற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வோல்கர் டர்க்கின் கருத்து
முன்னதாக செவ்வாய்கிழமை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் (Volker Turk), காசா நகரில் உள்ள ஷிஃபா மருத்துவ மையம் மற்றும் தெற்கு நகரமான கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனை மற்றும் வசதிகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாரிய புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டதைக் கண்டு தான் “திகிலடைந்ததாக” கூறியிருந்தார்.

மரணங்கள் தொடர்பாக சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்,

அத்துடன் தற்போது நிலவும் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படும் சூழலைக் கருத்தில் கொண்டு, இதில் சர்வதேச புலனாய்வாளர்களும் இருக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேலிய அரசாங்கத்திடம் தகவல்
இதேவேளை போரில் ஈடுபடும் திறன் இல்லாத, பொதுமக்கள், கைதிகள் மற்றும் பிறரை வேண்டுமென்றே கொலை செய்வது ஒரு போர்க் குற்றமாகும் என்றும் அவர் குற்றம் சுமத்தினார்.

அமெரிக்க வெளியுறவுத் துறை பேச்சாளர் – வேதாந்த் படேல், வெகுஜன புதைகுழிகள் தொடர்பில், அமெரிக்க அதிகாரிகள், இஸ்ரேலிய அரசாங்கத்திடம் தகவல் கேட்டுள்ளதாகவும் கூறியமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.