Schengen Visa New Rules: 29 ஐரோப்பிய நாடுகளில் பலமுறை பயணிக்கலாம்
சவுதி அரேபியா, பஹ்ரைன், ஓமன் மற்றும் இந்தியா உட்பட்ட நாடுகளின் குடிமக்களுக்கு ஷெங்கன் விசா வழங்குவதற்கான புதிய விதிமுறைகளுக்கு ஐரோப்பிய ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
பலமுறை பயன்படுத்தக்கூடிய விசா
இதன் அடிப்படையில் சவுதி, பஹ்ரைன் மற்றும் ஓமன் குடிமக்களுக்கு பலமுறை பயன்படுத்தக்கூடிய விசா அனுமதிக்கப்படும். இந்த நாட்டவர்கள் ஒரே விசாவினை பயன்படுத்தி 29 ஐரோப்பிய நாடுகளுக்கும் பலமுறை பயணிக்கலாம்.
ஆனால் 5 ஆண்டுகள் மட்டுமே இந்த விசா செல்லுபடியாகும். இதனால் ஒவ்வொருமுறையும் விசாவுக்கு விண்ணப்பிக்கும் சிக்கல் இனி இருக்காது. மேலும், சவுதி அரேபியா, இந்தியா, பஹ்ரைன் உள்ளிட்ட நாட்டவர்கள், தங்கள் சொந்த நாட்டில் குடியிருந்தால் மட்டுமே இந்த சிறப்பு விசாவுக்கு தகுதி பெறுவார்கள்.
ஐக்கிய அரபு அமீரக மக்கள் ஷெங்கன் நாடுகளுக்கு விசா இல்லாத பயணம் மேற்கொள்ளலாம் என்பதுடன், 3 மாதம் வரையில் அவர்கள் தங்கியிருக்கலாம். இருப்பினும், ஐக்கிய அரபு அமீரக குடிமக்களுக்கு மட்டுமே இந்த ஷெங்கன் விசா சலுகைகள் பொருந்தும்.
இந்த நிலையில், ஐரோப்பிய ஆணையம் இந்தியர்களுக்கு பல நுழைவு விசாக்களை வழங்குவதற்கான குறிப்பிட்ட விதிகளை அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில், 2 ஆண்டுகளுக்கான பலமுறை பயணிக்கும் வகையில் ஷெங்கன் விசா அனுமதிக்க உள்ளனர்.
இந்தியர்களுக்கு புதிய வாய்ப்பு
முன்னர் குறைந்த நாட்களுக்கே விசா அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 2 ஆண்டுகளுக்கு ஒரே விசாவில் பலமுறை பயணிக்க முடியும். கடந்த 3 ஆண்டுகளில் 2 ஷெங்கன் விசாவுக்கு விண்ணப்பித்து அதை பயன்படுத்தியுள்ள இந்தியர்களுக்கு இந்த புதிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2 ஆண்டுகளுக்கான விசாவை உரிய முறையில் பயன்படுத்தும் இந்தியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கான புதிய ஷெங்கன் விசா அனுமதிக்கப்படும். ஷெங்கன் விசா வைத்திருப்பவர் 180-நாள் காலப்பகுதியில் அதிகபட்சம் 90 நாட்கள் வரையில் ஷெங்கன் பகுதியில் சுதந்திரமாக பயணிக்க அனுமதிக்கும்.
மட்டுமின்றி, ஷெங்கன் விசா வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக வேலை செய்ய அனுமதிக்கமாட்டார்கள். ஷெங்கன் பகுதி என்பது பிரித்தானியா தவிர்த்து 29 ஐரோப்பிய நாடுகளாகும்.