மணிப்பூரில் தேர்தலின்போது வன்முறை… சூறையாடப்பட்ட வாக்குச்சாவடி!
மணிப்பூரில் 2-ஆம் கட்ட மக்களவைத் தேர்தலிலும் வன்முறை வெடித்ததால், வாக்குச்சாவடிகள் சூறையாடப்பட்டன.
மணிப்பூரில் உள்ள மெய்தி, குகி இன மக்களுக்கு இடையே இடஒதுக்கீடு தொடர்பாக வெடித்த மோதல், நீறுபூத்த நெருப்பாய் தகித்து வருகிறது. இந்நிலையில், புறநகர் மணிப்பூரில் உள்ள 8 மாவட்டங்களில் 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.
அப்போது, உக்ருல் என்ற இடத்தில் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிக்குள் புகுந்த வன்முறையாளர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தை சேதப்படுத்தினர். கண்காணிப்பு கேமராக்களையும் வன்முறையாளர்கள் உடைத்ததால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.
நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சிலை சேர்ந்தவர்கள், குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்க வற்புறுத்தியதாக புகார்கள் எழுந்துள்ளன. ஒருசில இடங்களில் வாக்குச்சாவடியை உள்பக்கமாக தாழிட்டு வாக்காளர்களை உள்ளே அனுமதிக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.