மகாஜனா கல்லூரியின் உப அதிபர் ஜெயந்தி ஜெயதரன் காலமானார்
தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் சிரேஷ்ட விளையாட்டுத்துறை ஆசிரியையும் உப அதிபருமான ஜெயந்தி ஜெயதரன் தனது 59ஆவது வயதில் நேற்றுமுன்தினம் காலமானார்.
மகாஜனா கல்லூரியில் விளையாட்டுத்துறை ஆசிரியையாக சுமார் 10 வருடங்கள் பணியாற்றி வந்த ஜெயந்தி ஜெயதரன், பல விளையாட்டு வீர, வீராங்கனைகளின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்.
தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் கல்வி பயின்ற அவர் அதே பாடசாலையில் ஆசிரியையாகவும் கடமையாற்றினார்.
யூனியன் கல்லூரியின் வலைப்பந்தாட்ட அணியைக் கட்டியெழுப்புவதில் மிக முக்கிய பங்காற்றிய ஜெயந்தி ஜெயதரன், 2012இல் மலேசியாவில் நடைபெற்ற வலைப்பந்தாட்டப் போட்டியில் யூனியன் கல்லூரி அணியைப் பங்குபற்றச் செய்திருந்தார்.
அதன் பின்னர் மகாஜனா ஆசிரியர் குழாத்தில் இணைந்த அவர் அங்கும் விளையாட்டுத்துறையின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றினார்.
தேசிய பாடசாலைகள் மட்டத்தில் மெய்வல்லுநர் போட்டிகளில் சாதனைகள் நிலைநாட்டிய மகாஜனா மாணவர்களின் வெற்றிகளில் அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.