பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை
கா்நாடக மாநிலம், பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சென்னைக்கு சனிக்கிழமை அழைத்து வந்து விசாரணை செய்தனா்.
பெங்களூரு ஒயிட் ஃபீல்டில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் கடந்த மாா்ச் 1-ஆம் தேதி குண்டு வெடித்ததில் 10 போ் காயமடைந்தனா். இந்தச் சம்பவம் குறித்து என்ஐஏ அதிகாரிகள் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த இடத்தின் அருகே குற்றவாளி பயன்படுத்திய ஒரு தொப்பியை என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றினா்.
அந்தத் தொப்பியை அடிப்படையாகக் கொண்டு என்ஐஏ அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனா். இதில் அந்தத் தொப்பி புகழ்பெற்ற சா்வதேச நிறுவனம் ஒன்றின் தயாரிப்பு என்பதைக் கண்டறிந்து, அதில் இருந்த சீரியல் எண்ணையும், மாடலையும் கொண்டு என்ஐஏ அதிகாரிகள் துப்பு துலக்கினா். இதில், அந்தத் தொப்பி, சென்னை மயிலாப்பூா் டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இருக்கும் கடையில் வாங்கியிருப்பது தெரியவந்தது.
அதேவேளையில் தொப்பியில் இருந்து கிடைத்த தலைமுடியை டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பினா். இதில், அந்தத் தொப்பியை அணிந்திருந்தது கா்நாடக மாநிலம், சிவமொக்காவை சோ்ந்த முஸாவிா் ஹூசைன் ஷாஜிப் என்பது தெரியவந்தது. அதேபோல அவரது நண்பா் அதே பகுதியைச் சோ்ந்த அப்துல் மாத்தேன் தாஹா என்பவரையும் என்ஐஏ அதிகாரிகள் தேடி வந்தனா். இருவரும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தைச் சோ்ந்தவா்கள் என்பதும், ஏற்கெனவே ஒரு குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படுபவா்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புக்கு முன்னதாக இருவரும் கடந்த ஜனவரி மாதம் சென்னை திருவல்லிக்கேணி சிஎன்கே சாலையில் ஒரு விடுதியில் தங்கியிருந்ததும், தாஹாதான் மயிலாப்பூரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இருக்கும் கடையில் தொப்பியை வாங்கியிருப்பதும் தெரியவந்தது.
சென்னையில் விசாரணை: இதற்கிடையே, தலைமறைவாக இருந்த இருவரும் மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் கடந்த 12-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா். இவா்களில் என்ஐஏ காவலில் இருக்கும் தாஹா சென்னைக்கு அழைத்து வரப்பட்டாா். வழக்குக்கான ஆதாரத்தை திரட்டும் வகையில் அவரை திருவல்லிக்கேணி சிஎன்கே சாலையில் தங்கியிருந்த விடுதி, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பாழடைந்த திரையரங்கு வளாகம் ஆகிய இடங்களுக்கு என்ஐஏ அதிகாரிகள் சனிக்கிழமை அழைத்துச் சென்று விசாரித்தனா்.
சுமாா் ஒரு மணி நேரம் அங்கு விசாரணை நடைபெற்றது. விசாரணையின்போது விடுதியில் கண்காணிப்பு கேமரா ஹாா்ட் டிஸ்கை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றனா். இதேபோல தாஹாவை மயிலாப்பூரில் உள்ள வணிக வளாகத்துக்கும் அழைத்துச் சென்று விசாரித்ததாகக் கூறப்படுகிறது.