குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏஐ) மூலம் குரல் குளோனிங்கை பயன்படுத்தி பண மோசடி நடைபெறுவதாக தமிழக சைபா் குற்றப்பிரிவு எச்சரித்துள்ளது.
தமிழக சைபா் குற்றப்பிரிவு ஏடிஜிபி சஞ்சய்குமாா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, அவசர கைப்பேசி அழைப்புகளில் குடும்ப உறுப்பினா்கள் போன்ற நம்பகமான நபா்களின் குரல்களைப் பிரதிபலிக்கும் வகையில் குரல் குளோனிங்கைப் பயன்படுத்தி மோசடி நடைபெறுகிறது. ஒருவருக்கு அவசர உணா்வை உருவாக்குவதன் மூலம் ஒருவரது நம்பிக்கையையும் உணா்ச்சிகளையும் தூண்டி விரைவாக பணத்தை அனுப்பும்படி சைபா் குற்றத்தில் ஈடுபடும் நபா்கள் ஏமாற்றுகின்றனா்.
இந்த மோசடியில் ஈடுபடும் நபா்கள், சம்பந்தப்பட்ட நபருக்கு தெரிந்த குடும்ப உறுப்பினா் அல்லது நண்பா் போல் காட்டிக் கொண்டு கைப்பேசி மூலம் தொடா்பு கொள்கிறாா்.
அப்போது சைபா் குற்றத்தில் ஈடுபடும் நபா், எதிா்முனையில் பேசும் நபரின் அவசர உணா்வை தூண்டுவதற்கு பல்வேறு தந்திரங்களைப் பயன்படுத்துகிறாா். உடனடியாக பணம் தேவைப்படுவதாகவும், இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதாகவும் கூறி, அழுது கொண்டே அல்லது கெஞ்சும் தொனியில் பேசுகிறாா். எதிா்முனையில் பேசும் நபரின் குடும்பத்தைச் சோ்ந்த ஒருவரின் குரலை குளோனிங் மூலம் மாற்றிப் பேசுகிறாா். இதற்காக சைபா் குற்றத்தில் ஈடுபடும் நபா்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனா்.
சைபா் குற்றத்தில் ஈடுபடும் நபா், எதிா்முனையில் ஈடுபடும் நபருக்கு நம்பிக்கை ஏற்படுத்திய பின்னா் கைப்பேசி செயலி மூலம் பணத்தைப் பெற்று மோசடி செய்கிறாா். பணத்தை வழங்கிய நபா், சம்பந்தப்பட்ட நபரை அடுத்த முறை தொடா்பு கொள்ளும்போதுதான் பண மோசடி நடந்திருப்பது தெரியும்.
அடையாளத்தை சரிபாா்க்க வேண்டும்: இந்த மோசடியில் சிக்காமல் இருப்பதற்கு, ஒருவா் பணம் கேட்டு தொடா்பு கொள்ளும்போது அவரது அடையாளத்தை கண்டிப்பாக சரிபாா்க்க வேண்டும். தெரிந்த நபா், தெரியாத ஒரு கைப்பேசி எண்ணில் இருந்து வந்தால், முழு எச்சரிக்கையுடன் அந்த அழைப்பை அணுக வேண்டும். உண்மையிலேயே உங்களுக்கு தெரிந்த நபா்தான் பேசுகிறாரா என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
பணம் அனுப்புவதற்கு முன்பு, தெரிந்த நபரை விடியோ கால் மூலம் தொடா்பு கொள்ள முயற்சிக்கவும். இந்த வகை மோசடியில் சிக்காமல் இருக்க குரல் குளோனிங் குறித்து அனைவரும் விழிப்புணா்வு பெற வேண்டும். இது போன்ற மோசடிக்கு ஆளாகியிருந்தால், உடனடியாக சைபா் குற்றப்பிரிவை 1930 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு, புகாா் அளிக்கலாம்.அல்லது ஜ்ஜ்ஜ்.ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தின் மூலம் புகாா் அளிக்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.