யாழில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி விநியோகம்
யாழ்ப்பாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி விநியோகம் குறித்து யாழ்.மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
யாழ்.மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட 131652 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி விநியோகம் கடந்த 20ஆம் திகதி முதல் கிராம அலுவலர் பிரிவு ரீதியாகவும், கிராம அலுவலர் பிரிவு கொத்தணி ரீதியாகவும் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
யாழ். மாவட்டத்தின் மொத்த சனத்தொகையோடு ஒப்பிட்டு நோக்குகின்ற போது 62.66 வீதமான குடும்பங்கள் மேற்படி அரிசி விநியோகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
யாழ்.மாவட்டத்தில் அரிசி வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்திருந்த, பதிவு செய்யப்பட்ட 17 அரிசி ஆலைகளூடாக அரிசி விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், 110220 குடும்பங்களுக்கான அரிசி, குறித்த அரிசி ஆலைகள் மூலம் விநியோகிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் 98175 குடும்பங்களுக்கு பிரதேச செயலாளர்களால் கிராம மட்ட அலுவலர்களூடாக அரிசி வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரம், தொடர்ச்சியாக அரிசியை பொதுமக்களுக்கு விநியோகிக்கின்ற நடவடிக்கையினை பிரதேசசெயலாளர்கள் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மூலம் முன்னெடுத்து வருகின்றனர்.
அதேவேளை, நெடுந்தீவு, காரைநகர், சாவகச்சேரி, சண்டிலிப்பாய், சங்கானை, கரவெட்டி, பருத்தித்துறை மற்றும் மருதங்கேணி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் 90 வீதத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அரிசி விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.