தமிழினத்திற்கும் பீரிஸ் சர்வதேச விசாரணையை கோர வேண்டும்
ஈஸ்டர் தாக்குதலுக்கு சர்வதேச விசாரணையைக் கோரும் ஜி.எல். பீரிஸ், தமிழ் மக்களுக்கும் சர்வதேச உதவியுடன் நீதியைப் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும் என வடமாகாண முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
ஈஸ்டர் தற்கொலைத் தாக்குதல் கடந்த ஐந்தாண்டுகளாக கொழும்பு அரசியல் தளத்தில் பேசுபொருளாக உள்ளது.
இதுவரை விசாரணை அறிக்கை வெளிவரவில்லை. இந்த விடயம் தொடர்பில் அண்மையில் நாடாளுமன்றத்தில் மூன்று நாட்கள் விவாதமும் நடைபெற்றுள்ளது.
விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ஜி.எல். பீரிஸ், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் உள்ளக விசாரணைகள் மீது கத்தோலிக்க மக்களுக்கோ நாட்டின் ஏனைய மக்களுக்கோ நம்பிக்கை கிடையாது.
விசாரணைகளுக்கு சர்வதேச ஒத்துழைப்பும் சர்வதேச தரப்பின் கண்காணிப்பும் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும். சர்வதேச ஒத்துழைப்புடன் விசாரணைக்கான விசேட பொறிமுறை ஸ்தாபிக்கப்பட வேண்டும். விசாரணை பூரணமாக அமைய வேண்டும் என தெரிவித்தார்.
தாக்குதலுக்கு நீதி கோரி ஜி.எல். பீரிஸ் தெரிவித்த மேற்படி கருத்துகளின் மூலம் இந்த நாட்டில் உள்ளக விசாரணைகள்மீது மக்களுக்கு நம்பிக்கை கிடையாது.
எனவே, உயிர்த்த ஞாயிறன்று பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்க ஜி.எல். பீரிஸ் கூறிய அதே அடிப்படையில் பாதிக்கப்பட்ட பல்லாயிரம் தமிழ் மக்களுக்கும் நீதி வழங்க ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கலப்புப் பொறிமுறை விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் பேசி தமிழ் மக்களுக்கும் நீதி கிடைக்க வழியேற்படுத்துவீர்கள் என நம்புகின்றோம்.
தமிழினத்திற்கு நீதிகோரும் தங்களது நாடாளுமன்ற உரையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம் என மேலும் தெரிவித்தார்.