இந்தியாவின் மசாலாக்கள் நிராகரிப்பு – சிங்கப்பூரை தொடர்ந்து ஆராயும் அமெரிக்கா!
இந்தியாவின் மசாலா பொருட்களை அமெரிக்கா ஆராய முன்வந்துள்ளது.
எவரெஸ்ட், எம்.டி.ஹெச்
இந்தியாவில் தயாராகி ஏற்றுமதி செய்யப்படும் எவரெஸ்ட், எம்.டி.ஹெச் மசாலா பொருட்களில், புற்றுநோயை உருவாக்கும் பூச்சிக்கொல்லிகள் அதிகம் இருப்பதாக சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் புகார்கள் எழுந்தன.
தொடர்ந்து, அந்த மசாலாக்கள் திரும்பப்பெறப்பட்டன. தற்போது, இந்த மசாலாக்களின் புற்றுநோய் பின்புலம் குறித்து அமெரிக்காவும், தனது உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) வாயிலாக ஆராயவுள்ளது.
இது தொடர்பாக பதிலளித்திருக்கும் எவரெஸ்ட் நிறுவனம் தங்களது மசாலா பொருட்கள் நுகர்வுக்கு பாதுகாப்பானது என்றும் இந்திய மசாலா வாரியத்தின் ஆய்வகங்களில் இருந்து தேவையான அனுமதிகள் மற்றும் ஒப்புதலைப் பெற்ற பின்னரே அதன் தயாரிப்புகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன எனத் தெரிவித்தது.
அமெரிக்கா ஆய்வு
மேலும், எம்டிஹெச், தங்கள் தயாரிப்புகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படையற்ற, உண்மைக்குப் புறம்பான மற்றும் ஆதாரம் இல்லாதது. தங்கள் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளிக்கும் வகையில், உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அவசியமான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தரங்களை நாங்கள் கடைபிடிக்கிறோம் என உறுதியளித்துள்ளது.
தொடர்ந்து, இந்திய மசாலா வாரியம், ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் எம்டிஹெச் மற்றும் எவரெஸ்ட் ஏற்றுமதி மற்றும் விற்பனைகள் தொடர்பான தரவைக் கோரியுள்ளது.
இந்த விவகாரத்துடன் தொடர்புடைய ’சால்மோனெல்லா’ மாசுபாடு குற்றச்சாட்டு காரணமாக, கடந்த 6 மாதங்களில் எம்டிஹெச்சின் 31 சதவீத மசாலா பொருட்களின் ஏற்றுமதியை அமெரிக்கா நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.