புதிதாக கண்டறியப்பட்டுள்ள 49 சுற்றுலாத் தலங்கள் : வெளியாகவுள்ள வர்த்தமானி அறிவித்தல்
இலங்கையில் தற்போதைக்கு இனம் காணப்பட்டுள்ள 49 சுற்றுலாத் தலங்களை புதிய சுற்றுலா வலயங்களாக விரைவில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே (Diana Gamage) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (29.04.2024) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“சுற்றுலாத் துறையின் மேம்பாட்டுக்காக மேலும் 49 சுற்றுலாத் தலங்கள் இனங்காணப்பட்டுள்ளன. இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அவற்றை சுற்றுலா வலயங்களாக அறிவித்து வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
விசேட குழு
இந்நாட்டில் சுற்றுலாப் பயணிகளுக்கு நடக்கும் தொல்லைகள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கின்றன.
அதேவேளை, சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக விலைக்கு உணவுப் பொருட்களை விற்பனை செய்தல், சுற்றுலாத் தலங்களுக்கு செல்லக் கூடிய தொடருந்து டிக்கெட்டுக்களை அதிக விலைக்கு விற்பனை செய்தல் போன்ற பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
இவ்வாறான மோசடிகளைத் தடுக்கவும் கண்காணிக்கவும் தனியான குழுவென்றை நியமிக்க நான் பரிந்தரைத்துள்ளேன்.
இந்நாட்டில் இயங்கும் ஆயுர்வேத ஸ்பா மையங்கள் தொடர்பில் அண்மைக் காலங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இவை உண்மையில் ஏனைய நாடுகளில் ஆரோக்கிய மையங்களாகவே இயங்குகின்றன.
நிவாரண நடவடிக்கைகள்
மக்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துபவையாக அவை இருக்க வேண்டும்.
ஆனால், இந்நாட்டில் அவ்வாறான இடங்களில் இடம்பெறுபவை பற்றி நான் குறிப்பிடத் தேவையில்லை.
எனவே, இந்நாட்டு மக்களின் சுகாதாரம், ஆரோக்கியம் தொடர்பில் கவனம் செலுத்தி அவற்றை முறைப்படுத்தி கண்காணிப்பு பொறிமுறைகளை உருவாக்க சுகாதார அமைச்சுடன் நாம் கலந்துரையாடி வருகின்றோம்.
பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்கும் பொது மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் குறித்து இப்போதைய நிலையை விடவும் அதிகமாக மக்களுக்கு தெளிவூட்டல்கள் இடம்பெற வேண்டும்”என அவர் குறிப்பிட்டுள்ளார்.