யாழில் பெண் கிராம அலுவலரை மதுபோதையில் தகாத வார்த்தையில் பேசிய பொலிஸ் அதிகாரி!
யாழ்.வடமராட்சி, வெற்றிலைக்கேணி பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் ஆடு ஒன்றை திருடி இறைச்சிக்காக வெட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் நேற்று (29.04.2024) கட்டைக்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கணவனை இழந்த குறித்த பெண் தனது இரு பிள்ளைகளுடன் வாழ்ந்து வரும் சூழலில் வாழ்வாதாரத்திற்காக ஆடுகளை வளர்த்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில், மேய்ச்சலுக்காக சென்ற ஆடு ஒன்றினை திருடி, இறைச்சிக்காக வெட்டி விற்பனை செய்தபோது கட்டைக்காட்டில்வைத்து இறைச்சி மீட்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்றிருந்த மருதங்கேணி பொலிஸார் ஆட்டை இறைச்சிக்காக வெட்டிய இடத்தை கண்டு பிடித்ததோடு, சந்தேக நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இச் சம்பவத்தை அறிந்து, குறித்த இடத்திற்கு விரைந்து சென்ற வெற்றிலைக்கேணி பெண் கிராம அலுவலருடன், மது போதையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தகாத வார்த்தை பிரயோகத்தில் ஈடுபட்டதாக, வெற்றிலைக்கேணி பெண் கிராம அலுவலர் குற்றம் சாட்டியுள்ளார்.
கிராம அலுவலருடன் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் தொடர்பில் முள்ளியான் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டு, மருதங்கேணி பொலிஸ் அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.