‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ – வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?
எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ (மோடி கைது செய்யப்பட வேண்டும்) என்கிற குறிச்சொல் (ஹாஷ்டேக்) வைரலாகி வருகிறது.
பிரிட்டனை சேர்ந்த மருந்து நிறுவனமான ஆஸ்ட்ராஸெனெகா நிறுவனம் பிரிட்டன் நீதிமன்றத்தில் தனது தயாரிப்பான கரோனா தடுப்பூசியால் ரத்தம் உறைதல் மற்றும் ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கை கணிசமாக குறையலாம் என ஒப்புக்கொண்டதையடுத்து சமூக வலைத்தளங்களில் இது விவாதப் பொருளாகியுள்ளது.
இந்தியா உள்பட மத்திய மற்றும் குறைவான வருவாய் கொண்ட நாடுகளில் ‘கோவிஷீல்ட்’ என்ற பெயரில் ஆஸ்ட்ராஸெனெகாவின் தடுப்பூசி தயாரிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டது.
இந்தியாவில் சீரம் நிறுவனத்தால் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டன.
சீரம் நிறுவனத்திடம் இருந்து பாஜக ரூ.52 கோடி நன்கொடையை தேர்தல் பத்திரம் மூலமாக பெற்றுள்ளது. பணம் பெற்றுகொண்டு பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில், பாஜக அரசு செயல்பட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இளம்வயதில் மாரடைப்பு ஏற்படுவதற்கும் இந்த தடுப்பூசிதான் காரணமா என்கிற வகையில் சமூக வலைத்தளங்களில் மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.