விவாகரத்து வாங்கிய மகளை மேள தாளத்துடன் வரவேற்ற தந்தை
கணவரிடம் இருந்து விவாகரத்து வாங்கிக் கொண்டு வந்த மகளை மேளதாளத்துடன் தந்தை வரவேற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வரதட்சணை கொடுமை
இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் அனில்குமார். இவருடைய மகள் ஊர்வி (36) கம்ப்யூட்டர் என்ஜினீரிங் படித்தவர்.
இவர், கடந்த 2016 -ம் ஆண்டு கணினி பொறியாளர் ஒருவரை திருமணம் செய்து டெல்லியில் வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், இவரது மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை மற்றும் பிரச்சனைகள் வந்துகொண்டே இருந்துள்ளது.
கடந்த 8 ஆண்டுகளாக துன்பங்களை தாங்கி கொண்ட ஊர்வி கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். பின்னர், கடந்த பிப்ரவரி 28 -ம் திகதி நீதிமன்றம் அவருக்கு விவாகரத்து வழங்கியது.
வரவேற்ற தந்தை
இந்நிலையில், விவாகரத்து பெற்ற மகள் பெற்றோர் வீட்டிற்கு வந்த போது, அவரது தந்தை பட்டாசுகள் வெடித்து, மேளதாளத்துடன் வரவேற்றார். இந்த சம்பவம் தான் தற்போது சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக தந்தை அனில்குமார் கூறுகையில், “சில ஆண்டுகளுக்கு முன்பு இப்படி தான் மகளை திருமணம் செய்து அனுப்பி வைத்தோம். அதே போல, விவாகரத்து பெற்ற பின்னரும் வரவேற்கிறோம்.
தற்போது எனது மகள் வலிமையுடன் வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்பது தான் எங்களது வேண்டுதல்” என்றார்.