Covid தடுப்பூசி சான்றிதழ்களில் மோடியின் படம் திடீரென நீக்கம்.., சர்ச்சையாகும் விவகாரம்
கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படும் என்று உறுதியான நிலையில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் படம் நீக்கப்பட்டுள்ளது.
கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகள்
சீன நாட்டில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதுமாக பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன.
அந்தவகையில், இங்கிலாந்தைச் சேர்ந்த அஸ்ட்ராஜெனகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து கொரோனாக்கான தடுப்பூசியை உருவாக்கின.
இந்த தடுப்பூசியானது கோவிஷீல்டு (Covishield ) என்ற பெயரில் விநியோகம் செய்யப்பட்டு உலகம் முழுவதும் போடப்பட்டது. அந்தவகையில், இந்தியாவில் சுமார் 175 கோடிக்கும் அதிகமாக கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது.
தற்போது, கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவு ஏற்படும் என அஸ்ட்ராஜெனகா நிறுவனம் ஒப்புக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மோடியின் படம் நீக்கம்
இந்நிலையில், இந்தியாவில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு வழங்கப்படும் கோவின் (CoWIN) சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் அகற்றப்பட்டுள்ளது.
இந்த சான்றிதழ்களில் மோடியின் உருவத்துடன், “ஒன்றாக இணைந்து, இந்தியா கோவிட்-19-ஐ தோற்கடிக்கும்” என்ற வாசகமும் இடம்பெற்றிருக்கும்.
இதனால் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் மோடியின் புகைப்பட நீக்கம் குறித்து பதிவிட்டு கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இது தொடர்பாக சுகாதார அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், “மக்களவைத் தேர்தலுக்கான நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது. மோடியின் புகைப்படம் நீக்குவது முதல்முறையல்ல.
கடந்த 2022ம் ஆண்டில், நடந்த உத்தரபிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா தேர்தல்களிலும் மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டது” என்றனர்.