சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு சாதகமான சட்டம்: மாற்றத்தை ஏற்படுத்திய நீதிமன்றத்தின் தீர்ப்பு
ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பு, சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு சாதகமாக ஒரு சட்டத்தையே உருவாக்க காரணமாக அமைந்துள்ளது.
ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு
2021ஆம் ஆண்டு, வழக்கொன்றில் தீர்ப்பளித்த ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம், சுவிட்சர்லாந்தில் தற்காலிகமாக வாழ்வோர், அதாவது, F உரிமம் பெற்று (provisionally admitted foreigners) வாழ்வோருடைய குடும்பத்தினர், அவர்களுடன் சேர்ந்துகொள்ள இரண்டு ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பது, ஐரோப்பிய மனித உரிமைகள் ஒப்பந்தத்தின் கீழ், குடும்ப வாழ்வு உரிமையை மீறும் செயலாகும் என்று கூறியிருந்தது.
வெளிநாட்டவர்களுக்கு சாதகமான சட்டம்
இந்நிலையில், ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், சுவிட்சர்லாந்தில் தற்காலிகமாக வாழ்வோர், அதாவது, F உரிமம் பெற்று (provisionally admitted foreigners) வாழ்வோருடைய குடும்பத்தினர், அவர்களுடன் சேர்ந்துகொள்ள மூன்று ஆண்டுகள் காத்திருக்கவேண்டும் என்ற நிலையை மாற்றி, இனி அவர்கள் இரண்டு ஆண்டுகள் மட்டுமே காத்திருந்தால் போதும் என்னும் வகையில் சட்டத்திருத்தம் ஒன்றைக் கொண்டுவர சுவிஸ் அரசு விரும்புகிறது.
அதற்கான ஆலோசனைகள் நேற்று முன் தினம் முதல் துவக்கப்பட்டுள்ளன. அத்துடன், சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில், வெளிநாட்டில் வாழும் குழந்தைகள், இப்போது திட்டமிடப்பட்டுவருவதைவிட சீக்கிரமாகவே சுவிட்சர்லாந்தில் வாழும் தங்களுடைய பெற்றோருடன் சேர்ந்துகொள்ளும் வகையில் சட்டத்தில் மாற்றம் செய்யவும் திட்டமிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.