இஸ்ரேலுடனான வர்த்தக உறவுகளை முறித்துக் கொண்ட துருக்கி
இஸ்ரேலுடனான(israel) அனைத்து வர்த்தக உறவுகளையும் நிறுத்த துருக்கி(turkey)நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயத்தை துருக்கியின் வர்த்தக அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
வர்த்தக நடவடிக்கை நிறுத்தம்
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இஸ்ரேல் தொடர்பான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பரிவர்த்தனைகள் நிறுத்தப்பட்டுள்ளன, அனைத்து தயாரிப்புகளையும் உள்ளடக்கியது.
காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் தடையின்றி போதுமான அளவு வருவதற்கு இஸ்ரேலிய அரசாங்கம் அனுமதிக்கும் வரை துருக்கி இந்த புதிய நடவடிக்கைகளை கண்டிப்பாகவும் தீர்க்கமாகவும் செயல்படுத்தும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மட்டும் இரு நாடுகளுக்கும் இடையே ஏழு பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான வர்த்தக பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.
சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்கள்
இந்த தீர்மானத்திற்கு பதிலளித்துள்ள இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சர், துருக்கி அதிபர் ரிசெப் தையிப் எர்டோகன்(recep tayyip erdogan)சர்வாதிகாரியாக செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எர்டோகன் “துருக்கி மக்கள் மற்றும் வணிகர்களின் நலன்களைப் புறக்கணித்து, சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களை புறக்கணிக்கிறார்” என்று இஸ்ரேல் காட்ஸ்(Israel Katz) எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், உள்ளூர் உற்பத்தி மற்றும் பிற நாடுகளின் இறக்குமதியை மையமாகக் கொண்டு துருக்கியுடனான வர்த்தகத்திற்கான மாற்று வழிகளைக் கண்டறியுமாறு வெளியுறவு அமைச்சகத்திற்கு அறிவுறுத்தியதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.