காங்கிரஸ் தலைவர் உடல் ஒப்படைப்பு; பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு – பகீர் பின்னணி!
காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஜெயக்குமார் மறைவு
நெல்லை, கரைச்சுத்து புதூரைச் சேர்ந்தவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங்(60). இவர் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்து வந்தார். மேலும், காண்டிராக்டர் தொழிலும் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர், வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. தொடர்ந்து, அவரது கட்சி அலுவலகத்தில் அவர் கைப்பட எழுதிய ஒரு கடிதம் சிக்கியது.
அதில், தனக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் தரப்பில் இருந்து கொலை மிரட்டல் வந்து கொண்டு இருக்கிறது. எனது உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் இந்த கடிதத்தில் நான் குறிப்பிட்ட நபர்கள் தான் காரணம் என்று எழுதப்பட்டு சிலரது பெயர்களும் குறிப்பிடப்பட்டு அந்த நபர்கள் தனக்கு லட்சக்கணக்கில் பணம் தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இறுதிச்சடங்கு
இதனையடுத்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவரது வீட்டின் பின்னால் உள்ள தென்னந்தோப்பில் உடல் எரிந்த நிலையில் ஜெயக்குமார் உடலை மீட்டனர். சடலமாக, கிடந்த அவர் கை, கால்கள் பலகையில் மின் ஒயரால் கட்டப்பட்டும், உடல் கருகிய நிலையிலும் இருந்தது.
உடனே உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, காட்சிகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், ஜெயக்குமாரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து ஜெயக்குமாரின் உடல் சொந்த ஊரில் உள்ள தேவாலயத்தில், இறுதி பிரார்த்தனைக்குப் பின் அடக்கம் செய்யப்படுகிறது.
இதில், காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்கிறார். இதற்கிடையில், ஜெயக்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை விரைவில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.