;
Athirady Tamil News

இணையவழி மோசடிகள் தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை

0

இலங்கை வங்கிகள் சங்கம், லங்காபே (LankaPay) மற்றும் ‘FinCSIRT’ ஆகியன இணைந்து, இணையவழி மோசடிகள் அதிகரித்துள்ளமை தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

உலகளவில் மற்றும் இலங்கையில், கவர்ச்சிகரமான இணைய சலுகைகளை காட்டி கையடக்கத் தொலைபேசி பயனர்கள் அறியாத இணைப்புகளை கவனக்குறைவாக கிளிக் செய்து, தீங்கிழைக்கும் பயன்பாடுகள் மற்றும் கோப்புகளை பதிவிறக்கம் செய்யத் தூண்டும் மோசடிகள் குறித்து இந்த அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

கட்டண அட்டைகள்
இந்தச் செயல்கள், கையடக்கத் தொலைபேசி சாதனத்திற்கான முழுமையான அணுகலை வழங்குவதோடு அதை தொலைவிலிருந்து கட்டுப்படுத்த மோசடிக்காரர்களுக்கு உதவுகிறது.

மோசடி செய்பவர்கள் கையடக்கத் தொலைபேசியின் கட்டுப்பாட்டை எடுத்தவுடன் அந்தச் சாதனத்தில் நிறுவப்பட்டுள்ள வங்கி அல்லது பணம் செலுத்தும் பயன்பாடுகளை எளிதாக அணுகலாம்.

இது வங்கிக் கணக்குகள் மற்றும் மொபைல் சாதனம் வழியாக அணுகப்படும் கட்டண அட்டைகளில் இருந்து திருடுவதற்கும் வழிவகுக்கும்.

எனவே, இதுபோன்ற மோசடிகளுக்கு இரையாகாமல் இருக்க பொது மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு குறித்த அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளன.

வழிகாட்டுதல்கள்
இந்த மோசடி செய்பவர்கள் இதுபோன்ற மோசடி நடவடிக்கைகளை மேற்கொள்ள சமூக ஊடக தளங்கள், வலைத்தளங்கள் மற்றும் இணைய செய்தித் தளங்களை பயன்படுத்துகின்றனர்.

இந்தநிலையில் மோசடிகளுக்குப் பலியாவதைத் தடுக்க, இலங்கை வங்கிகள் சங்கம், ‘LankaPay’ மற்றும் ‘FinCSIRT’, பொது மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறும் தாம் தரும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தியுள்ளன.

1) உண்மையற்ற ஒப்பந்தங்களை வழங்கும் இணைய விளம்பரங்களில் எச்சரிக்கை தேவை.

2) இணைப்புகளைக் கிளிக் செய்வதையும், தெரியாத மூலங்களிலிருந்து அப்ஸ் (Apps) அல்லது கோப்புகளைப் பதிவிறக்குவதையும் தவிர்க்கவும்.

3) சமூக ஊடக தளங்களில் அல்லது இணைய செய்தியிடல் தளங்களில் உள்ள அறியப்படாத மற்றும் அறிமுகமில்லாத குழுக்களில் இருந்து நீங்கள் அனுமதியின்றி சேர்க்கப்பட்டுள்ளீர்கள் என்றால், அத்தகைய குழுக்கள் மூலம் பகிரப்பட்ட இணைப்புகளைக் கிளிக் செய்வதைத் தவிர்க்கவும்.

4) உங்கள் சாதனத்தில் கடவுச்சொற்களைச் சேமிப்பதைத் தவிர்க்கவும்.

5) அப்பிள் ஸ்டோர் (Apple App Store), கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) போன்ற அதிகாரப்பூர்வ அப் ஸ்டோர்களில் இருந்து மட்டுமே அப்ஸைப் பதிவிறக்கவும்.

6) வங்கி அல்லது அப்ஸ் கிடைக்கும் இடங்களில் அணுக, பயோமெட்ரிக் (Bio metric) அங்கீகாரத்தைப் பயன்படுத்தவும். (கைரேகை, முக அங்கீகாரம்)

7) அதிகாரப்பூர்வ அப் ஸ்டோர்களில் இருந்து வைரஸ் தடுப்பு பயன்பாட்டை நிறுவி, வைரஸ்கள் மற்றும் தீம்பொருளைக் கண்டறிந்து அகற்றுவதற்கு அதைப் புதுப்பித்துக்கொள்ளவும்.

8) இணைப்புகளைக் கிளிக் செய்வதன் மூலம் தனிப்பட்ட அல்லது நிதித் தகவலை வெளியிடும்படி உங்களைத் தூண்டும் செய்திகளில் எச்சரிக்கையாக இருங்கள்.

9) உங்கள் சாதனத்தில் வழக்கத்திற்கு மாறான நடத்தையை நீங்கள் கண்டால், உடனடியாக உங்கள் கையடக்கத் தொலைபேசி இணைப்பை முடக்கவும் அல்லது விமானப் பயன்முறைக்கு (Airplane mode) மாற்றவும்.

10) FinCSIRT, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் பாதுகாப்பு எச்சரிக்கைகளில் கவனம் செலுத்துமாறும் அவர்களின் பரிந்துரைக்கப்பட்ட முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றி விழிப்புடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.