யாழ்.போதனா மீது அவதூறு பரப்புவதை நிறுத்துங்கள்
யாழ். போதனா வைத்தியசாலை தொடர்பாக அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களிலும், சில இணையத்தளங்களிலும் தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றது. அது நம் ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கும் செயல் என யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி யமுனானந்தா கவலை தெரிவித்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
வைத்தியசாலையில் தினமும் நடக்கும் சம்பவங்களை, இணையத்தளங்களில் நேரடியாக பதிவிடும் பொழுது வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளின் நம்பிக்கை குறையும்.
இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி ஏழை நோயாளிகளேயாகும். இது ஒரு திட்டமிட்ட செயலாகவே நாம் கருதுகிறோம்.
தினமும் வைத்தியசாலையில் ஒழுக்க நெறிகளை நாங்கள் பாதுகாத்து வருகின்றோம். தினமும் எத்தனை நோயாளிகள் வருகின்றார், இறக்கின்றார்கள் என்பதை பதிவிடுகின்றோம். குறிப்பாக தினமும் 8 தொடக்கம் 10 நோயாளிகள் இறக்கின்றார்கள்.
அவர்களின் இறப்புக்கான காரணம் எல்லாவற்றையும் மருத்துவ அடிப்படையில் ஆராய்ந்து வருகின்றோம் என தெரிவித்தார்.