;
Athirady Tamil News

மீண்டும் ஒரு பனிப்போர் வேண்டாம்: முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பில் சீன மற்றும் பிரான்ஸ் தலைவர்கள்

0

ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக நேற்று முன் தினம்  சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பிரான்ஸ் சென்ற நிலையில், இன்னொரு பனிப்போர் உருவாகாமல் தடுக்க பிரான்சின் உதவி வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டார் அவர்.

முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு
தொடரும் சீன உளவாளிகள் கைது, மற்றும் அமெரிக்காவும் அதன் கூட்டாளர்களான நாடுகளும் உக்ரைன் ஊடுருவலைக் காரணம் காட்டி ரஷ்யாமீது தடைகள் விதித்திருந்தாலும், ரஷ்யாவுடனான சீனாவின் எல்லையில்லா நட்பு தொடர்வது, என பல விடயங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் சீனாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு நிலவுகிறது.

இந்நிலையில், பிரான்ஸ் சென்ற சீன ஜனாதிபதியான ஜி ஜின்பிங்கிடம், உக்ரைனில் பாதுகாப்பு இல்லையென்றால், ஐரோப்பாவில் பாதுகாப்பு இருக்கமுடியாது என்ற விடயத்தை அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக்கொண்டுள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான்.

கணிக்க முடியாத அளவிலான அபாயங்கள், உலக வர்த்தகம் சிதைவுறும் அபாயம் குறித்த கவலைகள் என ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருப்பு முனையின் உலகம் நின்றுகொண்டிருக்கிறது என்றார் மேக்ரான்.

மீண்டும் ஒரு பனிப்போர் வேண்டாம்
உக்ரைன் ரஷ்ய மோதல்களை, சீனாவை விமர்சிக்க பயன்படும் கருவியாக பயன்படுத்துவதற்கு பதிலாக, இருதரப்பும் பேச்சுவார்த்தைகள் நடத்துவதன் மூலமே பிரச்சினைகளை தீர்க்கமுடியும் என்று கூறினார் ஜி ஜின்பிங்.

உக்ரைன் ரஷ்ய மோதலை, மூன்றாவது நாடு ஒன்றின் மீது பொறுப்பை சுமத்தி, அந்நாட்டின் பெயரைக் கெடுத்து, அதை புதிய பனிப்போர் ஒன்றை உருவாக்குவதற்கு பயன்படுத்துவதை நாங்கள் எதிர்க்கிறோம் என்று கூறினார் அவர்.

மேலும், ஜூலை மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளின்போது, உலகம் முழுவதும் போர் நிறுத்தம் செய்யப்படவேண்டும் என்றும் தலைவர்கள் இருவரும் கோரிக்கை வைத்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.