பட்டப்பகலில் மருத்துவமனைக்குள் நடந்த கொடூர சம்பவம்… மருத்துவர்கள் உட்பட பலரது நிலை கவலைக்கிடம்
சீனாவின் Zhenxiong மாவட்டத்தில் மருத்துவமனை ஒன்றில் நுழைந்து நபர் ஒருவரின் கொலைவெறித் தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவர்கள் உட்பட 23 பேர்கள்
தொடர்புடைய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மருத்துவர்கள் உட்பட 23 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் Yunnan மாகாணத்தின் வடகிழக்கில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றிலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது.
உள்ளூர் நேரப்படி மதியம் 1.20 மணியளவில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தாக்குதலின் காரணம் தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை. முதற்கட்ட தகவலில் குறைந்தது 10 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர் அல்லது கொல்லப்பட்டிருக்கலாம் என்றே கூறப்பட்டது.
ஆனால் அதன் பின்னர், இருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 23 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. பலரது நிலை கவலைக்கிடம் என்பதால், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவத்தில் நூலிழையில் தப்பிய ஒருவர் தெரிவிக்கையில், காயம்பட்டவர்களில் சிலர் மருத்துவர்கள் என்றே குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், தாக்குதல்தாரியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
வெளியான காணொளிகளில், தாக்குதலுக்கு இலக்கானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், பலர் பலத்த காயங்களுடன் சுருண்டுவிழுந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
தாக்குதல் சம்பவங்கள் அதிகரிப்பு
பொதுவாக இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் சீனாவில் மிக மிக அரிதாகவே முன்னெடுக்கப்படுகிறது. மேலும், பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருப்பதை சீனா தடை செய்துள்ளதுடன், கடுமையான விதிகளும் அமுலில் கொண்டுள்ளது.
ஆனால் சமீப ஆண்டுகளில், இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவே கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் Yunnan மாகாணத்தில் உளவியல் பாதிப்பு கொண்ட நபர் முன்னெடுத்த தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதுடன் 7 பேர்கள் காயங்களுடன் தப்பினர்.
ஜூலை மாதம் Guangdong மாகாணத்தில் மழலையர் பாடசாலையில் நடந்த தாக்குதலில் 6 பேர்கள் கொல்லப்பட்டதுடன் ஒருவர் காயங்கலுடன் தப்பினார். 2022 ஆகஸ்டு மாதம் Jiangxi மாகாணத்தில் மழலையர் பாடசாலையில் நடந்த தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன், 6 பேர்கள் காயங்களுடன் தப்பினர்.
Yunnan மாகாணத்தில் சில மாதம் முன்பு நிலச்சரிவு ஏற்பட்டு பலர் உயிருடன் புதைந்த நிலையில், இறப்பு எண்ணிக்கை 30 என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.