ஜேர்மனியில் இவர்கள்தான் வறுமைக்குள்ளாகும் அபாயத்தில் வாழ்கிறார்கள்: படிப்பு இருந்தும் பயனில்லையாம்
ஜேர்மனி முழுவதுமே இனவெறுப்பு காணப்படும் நிலையில், இனவெறுப்பின் காரணமாக, சம்பந்தப்பட்டவர்கள் வறுமைக்குள்ளாவது ஆய்வு ஒன்றிலிருந்து தெரியவந்துள்ளது.
ஜேர்மனியில் இவர்கள்தான் வறுமைக்குள்ளாகும் அபாயத்திலிருக்கிறார்கள்
ஜேர்மனியைப் பொருத்தவரை, கருப்பினத்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் ஆசிய இனத்தவர்கள்தான் வறுமைக்குள்ளாகும் அபாயத்திலிருக்கிறார்கள் என்கின்றன, பெர்லினிலுள்ள The German Center for Integration and Migration Research (DeZIM) என்னும் அமைப்பு மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள்.
அதாவது, புலம்பெயர்தல் பின்னணி இல்லாதவர்களைவிட, கருப்பினத்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் ஆசிய இனத்தவர்கள்தான் ஜேர்மனியில் வறுமைக்குள்ளாகும் அபாயத்திலிருக்கிறார்களாம்.
காரணம் என்ன?
அதற்கு காரணம் என்னவென்றால், இனரீதியாக ஒதுக்கப்படும் இந்த மக்களால் தொழிலாளர் சந்தையை அணுக முடியவில்லை. புரியும்படி கூறினால், இவர்களுக்கு எளிதாக வேலை கிடப்பதில்லை.
சில குறிப்பிட்ட பெயர்களைப் பார்த்தாலே, அத்தகையோரை நேர்காணலுக்கே அழைக்க மாட்டேன்கிறார்களாம், பணி வழங்குவோர். அதிகம் பாதிக்கப்படுவது இஸ்லாமியர்களாம். 33 சதவிகித இஸ்லாமிய ஆண்கள், வேலை கிடைக்காததால் வறுமைக்குள்ளாகும் அபாயத்தில் வாழ்கிறார்கள்.
இன்னொரு விடயம், வெளிநாடுகளில் கற்ற கல்வி ஜேர்மனியில் அங்கீகரிக்கப்படாததால், நன்றாக கற்றவர்களும்கூட நல்ல வேலை கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.
ஆக, முதலில் வெளிநாட்டுக் கல்வியை ஜேர்மனி அங்கீகரிக்கவேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அப்படிச் செய்வது, அகதிகளுக்கும் புலம்பெயர்ந்தோருக்கும், தங்கள் படிப்புக்கேற்ற வேலை கிடைக்க வழிவகை செய்யும். அதனால் அவர்கள் வறுமைக்குள்ளாவதிலிருந்து தப்பலாம் என்கிறார்கள் அவர்கள்.
மொழிப்பயிற்சி எளிதில் கிடைக்கவும், வெளிநாட்டவர்கள் எளிதில் ஜேர்மானியர்களோடு ஒன்றிணைந்து வாழவும் விரைவாக வழிவகை செய்வது, அவர்களுக்கு எளிதில் வேலை கிடைக்க உதவியாக இருக்கும் என்று கூறும் அவர்கள், அவர்கள் சொந்தமாக சம்பாதிக்க ஆரம்பித்தால் மட்டுமே அகதிகளிடையே அதிக அளவில் காணப்படும் வறுமை குறையும் என்கிறார்கள்.