தமிழ் மக்களின் அபிலாசைகளை ஈ.பி.டி.பியால் பெற்றுக்கொடுக்க முடியும் – வேலணையில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
தமிழ் மக்களின் அபிலாசைகளை தேசிய நல்லிணக்கமே நிறைவேற்றிக் கொடுக்கும். அத்துடன் அதுவே சாத்தியமான வழிமுறையாகவும் உள்ளது என ஈழ மக்கள் ஜன நாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அமைச்சரும் ஈழ மக்கள் ஜன நாயக கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் தீவகத்தின் வேலணை, ஊர்காவற்றுறை நெடுந்தீவு மற்றும் காரைநகர் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய கட்சியின் பொறுப்பாளர்கள் வட்டார செயலாளர்கள் வட்டார நிர்வாக உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்கள், முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு இன்று வேலணை துறையூர் முருகன் ஆலய பொது மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தீவகத்துக்கும் ஈ.பி.டிபிக்கும் இடையே நெருங்கிய தொடர்பும் வரலாறும் உண்டு.
” 90ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் தேசிய நீரோட்டத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்ற ஜனநாயகத்தினை பயன்படுத்தி தேசிய நல்லிணக்கத்தினை வலுப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வினை காண்பதற்கான பயணத்தினை முன்னெடுத்து வருகின்றேன்.
அதன் ஓர் அங்கமே நாம் இந்த தீவக மண்ணில் மக்களின் கோரிக்கையுடன் கால் பதித்து மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்த செயற்பாடும் அமையும்.
இதே நேரம் “நீண்ட காலமாக ஏறத்தாள மூன்று தசாப்தங்களாக தமிழ் மக்களினால் தொடர்ச்சியாக தெரிவு செய்யப்படுகின்ற மக்கள் பிரதிநிதியாக நான் இருக்கின்றேன்.
இதற்கு இந்த தீவக மக்களின் பங்களிப்பு அதிகமானதாக இருந்து வருகின்றது.
அதனடிப்படையில், எம்மால் வளர்க்கப்பட்டு வருகின்ற தேசிய நல்லிணக்கம் காரணமாக பல பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணப்பட முடிந்தது.
அதேபோன்று எமது மக்களின் வாழ்வாதார எதிர்பார்ப்புக்களை நிவர்த்தி செய்வதற்கான சந்தர்ப்பமாகவும் இதனை பயன்படுத்த முடிகின்றது
அதேபோன்று, எதிர்காலத்திலும் எமது பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் ஒரு தேசிய நல்லிணக்கப் பொறிமுறையே நடைமுறையில் சாத்தியமானதாக இருக்கும்.
அந்தவகையில் எமது மக்கள் போதிய அரசியல் பலத்தினை எமக்கு வழங்குவார்களாயின், எமது மக்களின் அபிவிருத்திதை மட்டுமல்லாது அரசியல் அபிலாசைகளையும் எம்மால் பெற்றுத்தர முடியும் என்ற யதார்த்தத்தையும் எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்த அமைச்சர்
மக்களுக்கு சரியான வழியைக் காட்டுவதாகவும் மக்கள் மத்தியில் காணப்படும் குழப்பங்களுக்கு சரியான தெளிவினை ஏற்படுத்துவதாகவும் கட்சியின் செயற்பாடுகள் அமைய வேண்டும் என்று தெரிவித்துள்ளதுடன்
எனைய கட்சிகள் போன்று இழுபட்டு செல்லும் வகையில் ஈ.பி.டி.பி. கட்சியின் செயற்பாடுகள் இருக்க கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.