தட்டில் வைத்து எடுத்துச் செல்லப்பட்ட சிதைந்த உடல்.. சிவகாசி அருகே 10 பேரைக் காவு வாங்கிய பட்டாசு ஆலை விபத்து!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள கீழதிருத்தங்கல் கிராமத்தில் இயங்கி வந்த சரவணன் என்ற நபருக்கு சொந்தமான பட்டாசு தயாரிப்பு ஆலையில் 50க்கும் மேற்பட்டோர் பணியாற்றினர். இந்நிலையில், நேற்று பிற்பகலில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில், 10 அறைகளில், 6 அறைகள் தரைமட்டமாகின. தீயிலும், கட்டட இடிபாடுகளிலும் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த கோர விபத்தில், 4 ஆண்கள், 6 பெண்கள் என தொழிலாளர்கள் 10 பேர் உயிரிழந்தனர்.
இதில், சிவகாசி காந்தி நகரைச் சேர்ந்த ஆவுடையம்மாள், அவரது மகள் முத்து, ஆவுடையம்மாளின் பேத்திகள் லட்சுமி, பேச்சியம்மாள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடைசியாக இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட அழகர்சாமி என்ற நபரின் உடல் பாகங்களை தட்டில் வைத்து எடுத்துச் சென்றது, பலரை நிலைகுலையச் செய்தது. சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பல உயிர்கள் பறிபோனது வேதனை அளிப்பதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த 12 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் ஆகியோர் அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இந்நிலையில், பட்டாசு ஆலை உரிமையாளர் சரவணன், ஆலை ஒப்பந்ததாரர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் மேற்பார்வையாளர் ஆகிய 3 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.