டயானாவுக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு சிக்கல்…தீவிரமடையவுள்ள விசாரணைகள்!
இங்கிலாந்து குடியுரிமை பெற்ற டயனா கமகே (Diana Gamage) உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளதை அடுத்து மற்றுமொரு சட்டச் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு டயானா கமகே சுற்றுலாப் பயணியாக இலங்கைக்கு (Sri Lanka) வந்ததிலிருந்து செல்லுபடியாகும் விசா இன்றி எப்படி இலங்கையில் வாழ்ந்தார் என்பது குறித்து சட்டமா அதிபருடன் ஆலோசிக்க குடிவரவு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்னதாக டயானா கமகே இங்கிலாந்து (England) குடியுரிமையைப் பெற்றதன் பின், சட்டப்படி இலங்கை பிரஜை என்ற அந்தஸ்தை அவர் தவறவிட்டுவிட்டார் என்பதை நீதிமன்றத்தில் உள்ள சாட்சியங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
பதவியை இழந்தார்
எனவே, இலங்கையர் அல்லாத இவர் உரிய ஆவணங்கள் எதுவுமின்றி நாட்டில் எப்படி வாழ்ந்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன்படி, புலம்பெயர்ந்தோர் சட்டத்தை மீறி போலி ஆவணத்தை பயன்படுத்தி அவர் நாட்டில் வசித்து வந்ததாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
எனினும், குடிவரவு அதிகாரிகள் இதனை கவனித்தார்களா என்ற கேள்விக்கு, பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க (Viyani Gunatilake) தாம் சட்டமா அதிபரிடம் அறிவுறுத்தல்களை கோரியுள்ளோம் என்று பதிலளித்துள்ளார்.
இதற்கு முன்னர் நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாறிய கீதா குமாரசிங்க (Geetha Kumarasinghe) இலங்கை மற்றும் சுவிட்சர்லாந்தில் இரட்டைக் குடியுரிமை காரணமாக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார்.
அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில்
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் இணைக்கப்பட்டபோது, இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் சிறிலங்கா அதிபர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக முன்னாள் சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) 2019 சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது அமெரிக்க குடியுரிமையை கைவிட வேண்டியிருந்தது.
எவ்வாறாயினும், அவரது அரசாங்கத்தின் கீழ் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டு, இதன் மூலம் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
புதிய சட்டத்தின் கீழ் இலங்கை மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளிலும் குடியுரிமை பெற்றிருந்த பசில் ராஜபக்ச சபைக்கு பரிந்துரைக்கப்பட்டார், இந்நிலையில், அடுத்த அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தில் அது மீண்டும் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.