மின்சார வாகனங்களுக்கு தடை விதித்த ஹர்சவின் குழு
இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு முழுமையாக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் காலத்தை நீடிக்கக் கோரும் அசாதாரண வர்த்தமானி அறிவித்தலுக்கு நாடாளுமன்ற மேற்பார்வைக் குழு தடை விதித்துள்ளது.
திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இன்மையே இதற்கான காரணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார வாகன அனுமதி
மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்கும் வர்த்தமானி அறிவித்தலை செப்டம்பர் 30 ஆம் திகதி வரை நீடிப்பது குறித்து பரிசீலிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா(Dr Harsha De Silva) தலைமையில் பொது நிதிக்கான குழு கடந்த வாரம் கூடியபோது, ஒப்புதல் வழங்கும் செயல்முறையை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டது.
இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முழுமையாக மின்சார வாகன அனுமதிகளை வழங்குவதில் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் குழுவிடம் அறிக்கைகளை சமர்ப்பிக்கும் வரை இந்த தடை இருக்கும் என்று ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
சலுகைத் திட்டத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை என்பதை தெரிவித்த ஹர்ச டி சில்வா, நிதி அமைச்சு, மத்திய வங்கி, இலங்கை சுங்கம் மற்றும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு ஆகியன இணைந்து முழுமையான பகுப்பாய்வை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
பகுப்பாய்வு பெறப்படும் வரை, உரிமம் வழங்கும் காலத்தை நீடிக்கும் வர்த்தமானிக்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.