பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட உலகின் முதல் மனிதன் மரணம்!
அமெரிக்காவில் (America) பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட உலகின் முதல் மனிதன், அறுவை சிகிச்சை முடிந்து இரண்டு மாதங்களான நிலையில் நேற்று (12) உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், உயிரிழந்த ரிக் ஸ்லேமேன் (Rick Slayman) எனும் நபருக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைக்கும் அவரது மரணத்துக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லையென அவருக்கு அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், அவரது மரணம் தொடர்பில் கவலையடைவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
அறுவை சிகிச்சை
அமெரிக்காவின் மசாச்சுசெட்ஸ் பொது மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் 62 வயதான ரிக் ஸ்லேமேன் என்பவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகம் அறுவை சிகிச்சையின் மூலம் பொருத்தப்பட்டது.
ஒரு உயிரினத்தின் உறுப்புகள் அல்லது திசுக்களை வேறொரு உயிரினத்திற்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொறுத்தும் உறுப்பு மாற்று சிகிச்சை முறையில் இந்த சாதனை ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது குறித்த அறுவை சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட ரிக் ஸ்லேமேன் எனும் நபர், 2 மாதங்களில் உயிரிழந்துள்ளமை பேசுபொருளாகியுள்ளது.
ஸ்லெமேனின் இறப்பு
இதையடுத்து, அவரது மரணத்துக்கும் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லையென மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மேலும் தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம், “ஸ்லேமேனின் இறப்பு அறுவை சிகிச்சையினால் நிகழவில்லை. ஸ்லேமேன் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முன்வரும் நோயாளிகள் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக விளங்கியுள்ளார்.
வேறு இன உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் எங்கள் மீது நம்பிக்கை வைத்ததற்காக நாங்கள் எப்போதும் அவருக்கு நன்றியுடன் இருப்போம்” என தெரிவித்துள்ளது.
சோகத்தில் குடும்பத்தார்
இதேவேளை, ஸ்லெமேனின் இறப்பு தங்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “ஸ்லெமேன் தற்போது மரணித்திருந்தாலும், மாற்று அறுவை சிகிச்சை செய்ய முன்வரும் பலரை ஊக்கப்படுத்துவார் என்பது ஆறுதலாக உள்ளது.
அவரை பராமரித்த மருத்துவர் குழுவுக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கிறோம். அவர்களின் அறுவை சிகிச்சையால் தான் நாங்கள் மேலும் 2 மாதங்கள் அவருடன் வாழ்ந்தோம்” என குறிப்பிட்டுள்ளனர்.