இலங்கையில் குறைவடைந்து வரும் பிறப்பு வீதம்! எதிர்காலம் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இலங்கையில் (Sri Lanka) பிறப்பு வீதம் பாரியளவில் குறைவடைந்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கையில் பிறப்பு வீதம் 30 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக கலுபோவில (Kalubowila) போதனா வைத்தியசாலையின் மகப்பேறு வைத்தியர் பேராசிரியர். அஜித் பெர்ணான்டோ (Ajith Fernando) தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில் இலங்கையில் 360,000 குழந்தைகள் பிறந்திருந்தாலும், 2023 ஆம் ஆண்டில் சுமார் 240, 000 குழந்தைகள் மாத்திரம் பிறந்திருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காரணங்கள்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “இலங்கையில் பிறப்பு வீதம் குறைவடைய பொருளாதார நெருக்கடியே முதன்மையான காரணி.
பொருளாதார சுமை காரணமாக இரண்டாவது குழந்தையை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் பல குடும்பங்கள் இருக்கின்றன.
அத்துடன், புதிதாக திருமணம் செய்பவர்களும் குழந்தைகளை பெற்றுக் கொள்வதை ஒத்தி வைக்கிறார்கள். குழந்தைகளை பெற்றுக் கொள்வதற்கு பதிலாக அதிக வருமானத்தை ஈட்டுவதையே பலர் நோக்கமாக கொண்டுள்ளனர்.
பிறப்பு வீதம்
சில இலங்கை தம்பதிகள் வெளிநாடுகளுக்கு புலம்பெயருவதை நோக்கமாக கொண்டுள்ளனர். இதுவரை இலங்கையில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்த இளைஞர்களும் தற்போது வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.
இவ்வாறான காரணங்கள் காரணமாக, இலங்கையில் பிறப்பு வீதம் குறைவடைந்து கொண்டே வருகிறது. 2.1 வீதத்துக்கு 2 வீதமாக ஒரு நாட்டின் பிறப்பு மற்றும் இறப்பு வீதம் இருக்க வேண்டும்.
பிறப்பு வீதம் தொடர்ந்து குறைவடைந்து வருவது, எதிர்காலத்தில் நாட்டில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும். அபிவிருத்தியடைந்து வரும் கொரியா (Korea) மற்றும் சீனா (China) போன்ற நாடுகள் எதிர்நோக்கும் நெருக்கடிகளை இலங்கையும் எதிர்நோக்க நேரிடும்” என எச்சரித்துள்ளார்.