யாழ்.சாட்டியில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது
யாழ்ப்பாணம் சாட்டி கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 03 கிலோ வெடிமருந்துகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் , அவற்றை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாட்டி கடற்கரை பகுதியில் வெடிபொருட்கள் காணப்படுவதாக, நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடி படையினர் 03 கிலோ 145 கிராம் வெடி மருந்துக்கள் , ஆர்.பி.ஜி எறிகணைகள் 08 மற்றும் 60 எம்.எம். மோட்டார் எறிகணைகள் 12 என்பவை மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட எறிகணைகள் சிலவற்றில் இருந்து வெடிமருந்துகள் பிரித்து எடுக்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட வெடி பொருட்களையும் , கைது செய்யப்பட்ட நபரையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.