இன்னும் சில மணி நேரம்… காஸா சுகாதார அமைப்புகள் மொத்தமாக ஸ்தம்பிக்கும் ஆபத்து
இஸ்ரேல் ராணுவத்தால் முற்றுகையிடப்பட்ட காஸாவின் சுகாதார அமைப்புகள் மொத்தமாக ஸ்தம்பிக்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முடங்கும் நிலை
காஸா சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், முற்றுகையிடப்பட்ட காஸா தொடர்பில் குறிப்பிட்டுள்ளனர். வெறும் சில மணி நேரம் மட்டுமே தாக்குப்பிடிக்கும் வகையில் நிலைமை மிக மோசமடைந்துள்ளதாக அதில் தெரிவித்துள்ளனர்.
முக்கியமான பாதையூடாக எரிபொருள் சரக்கு பரிமாற்றம் மொத்தமாக முடக்கப்பட்டதை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ் சேவை, ஊழியர்களுக்கான போக்குவரத்து உள்ளிட்டவை எரிபொருள் இன்றி முடங்கும் நிலை உள்ளது.
இதனிடையே, ரஃபா மீதான தாக்குதல் உறுதி என்றே இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் அழுத்தங்கள் தங்களின் முடிவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்றும் பிரதமர் நெதன்யாகு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஒழிப்பதே தங்கள் இலக்கு
ஆயுத ஏற்றுமதியை அமெரிக்கா முடக்கியுள்ளதை குறிப்பிட்டுள்ள பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேலிய வீரர்களுக்கு விரல்களின் நகங்களே போதும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்க ஆயுதங்களை பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் பயன்படுத்துவது சட்டவிரோதம் என்றும் ஜோ பைடன் நிர்வாகம் அறிவித்திருந்தது.
இருப்பினும், ரஃபாவை மொத்தமாக முற்றுகையிட்டு, ஹமாஸ் தலைவர்களை ஒழிப்பதே தங்கள் இலக்கு என நெதன்யாகு தரப்பு சூளுரைத்துள்ளது.