ரஷ்யா பல இழப்புகளை சந்தித்தாலும் தோற்கடிக்க கற்றுக்கொள்கிறது! நாங்கள் தயாராக இருக்க வேண்டும் – அமெரிக்க ஜெனரல்
போர்க்களங்களில் துருப்புகளின் இழப்புகளை சந்தித்தபோதும், மேற்கு நாடுகளை எவ்வாறு தோற்கடிப்பது என்பதை ரஷ்யா கற்றுக்கொள்கிறது என அமெரிக்க உயர்மட்ட ஜெனரல் தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டில் உக்ரைன் மீது ரஷ்யாவின் படையெடுப்பு முழு அளவில் தொடங்கியதில் இருந்து, ரஷ்ய இறப்புகளின் எண்ணிக்கை 465,000க்கும் அதிகமாக இருக்கும் என பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சகம் மதிப்பிட்டது.
இந்த நிலையில், அமெரிக்க இராணுவத்தின் V Corps போலந்தில் நிலைகொண்டுள்ள நிலையில், அதன் தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சார்லஸ் கோஸ்டான்சா ரஷ்யா இராணுவம் குறித்து கருத்து தெரிவித்தார்.
அவர் கூறுகையில், ”உக்ரைன் படையெடுப்பிற்கு முன்பிருந்தே ரஷ்யாவின் இராணுவம் பலத்த துருப்பு இழப்புகளை சந்தித்த போதிலும் வளர்ந்துள்ளது. மேலும், மேற்கத்திய போர் நுட்பங்கள் மற்றும் உபகரணங்களை எவ்வாறு தோற்கடிப்பது என்பதை கற்றுக் கொள்கிறது. நமக்கு நேரம் இருக்கிறது.
ரஷ்யா நிறைய இழப்புகளை சந்திக்கிறது. அவற்றை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும், மறுகட்டமைப்பதற்கும் சிறிது நேரம் எடுக்கும் என்ற தவறான எண்ணம் கொஞ்சம் இருப்பதாக நான் நினைக்கிறேன்.
எனக்கு அந்த பார்வை இல்லை. மாஸ்கோவின் படைகள் நவீனமயமாக்கப்பட்டுள்ளன. அவர்கள் மேற்கத்திய நுட்பங்களைப் பயன்படுத்துகிறார்கள். எவ்வாறு நவீன தாக்குதலை தோற்கடிப்பது என்பதை ரஷ்யா கற்றுக் கொள்கிறது. மேலும் நாங்கள் விரைவில் தயாராக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.