கெஹெலியவின் மனுவை பரிசீலிக்க இணங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றம்
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவை பரிசீலிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இணங்கியுள்ளது.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் குப்பிகளை இறக்குமதி செய்தமை தொடர்பிலான விசாரணை முடியும் வரை, தம்மை விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் எடுத்த தீர்மானத்தை செல்லுபடியற்ற உத்தரவிடுமாறு கோரியே, ரம்புக்வெல்ல இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்தநிலையில் குறித்த மனுவை, 2024 மே 31 அன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு விசாரணை
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் சசி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே மனுவை மே 31-ம் திகதி முதல் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதேவேளை, தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் குப்பிகள் ஊழல் தொடர்பான வழக்கு விசாரணை முடிவடையும் வரையில், தம்மை விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் எடுத்த தீர்மானத்தை செல்லுபடியற்ற உத்தரவிடுமாறு கோரி, சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கபில விக்கிரமநாயக்க தாக்கல் செய்த நீதிப்பேராணை மனுவையும், மே 30ஆம் திகதியன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.