யாழ். காக்கைதீவு பகுதியில் வீதியருகே எரிக்கப்பட்ட கழிவு பொருட்கள்: பயணிகள் சிரமம்
யாழ்ப்பாணம் (Jaffna) – காக்கைதீவு பகுதியில் வீதியோரத்தில் காணப்படும் கழிவுப் பொருட்களினால் அவ் வீதியூடாக பயணிக்கும் நபர்கள் பெறும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளனர்.
காக்கைதீவு மீன் சந்தையில் இருந்து சுமார் 150 மீற்றர்கள் தொலைவிலுள்ள வீதியோரத்தில் அடையாளம் தெரியாத நபர்களினால் இரவு சனப் புழக்கமற்ற நேரத்தில், வைத்தியசாலை கழிவுகள், வியாபார நிலையங்களின் கழிவுகள், வீட்டுக்கு கழிவுகள் உள்ளிட்ட பல கழிவுப் பொருட்களை இட்டுச்செல்வதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மக்களது கோரிக்கை
இதன் காரணமாக அந்த கழிவுகளால் வீதியெங்கும் துர்நாற்றம் வீசுவதாகவும் வீதியூடாக பயணிக்கும் நபர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் இன்றையதினம் (14.05.2024) அங்கு வந்த யாழ்ப்பாண மாநகரசபை ஊழியர்கள் அவ்விடத்திலிருந்த கழிவுப் பொருட்களுக்கு தீ மூட்டியுள்ளனர்.
இதனால் ஏற்பட்ட புகைமண்டலத்தினால் வழி மாசடைந்ததுடன் வீதியூடாக பயணிக்கும் நபர்கள் அசௌகரியங்களையும் எதிர்நோக்கியுள்ளனர்.
தேவையற்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள், வீதியில் உள்ள இந்த கழிவுகளை கண்டும் காணாதது போல் செயற்படுவதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
எனவே, குறித்த பகுதியில் கழிவுப் பொருட்களை இடுபவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.