;
Athirady Tamil News

மே 18 ஐ தமிழ்தேசிய துக்க தினமாக அனுஷ்டிப்பு!

0

தமிழர் தாயகத்தில் மே 18 ம் திகதியை தமிழ்தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க ஒருங்கிணைந்த தமிழர்
கட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த செய்தி குறிப்பில்,தமிழ் மக்கள் மிக கொடூரமாக கொன்று அழிக்கப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவுறுகின்ற வலி சுமந்த நாட்களை நினைவு கூருகின்ற இந்த தருணத்தில் தமிழராகிய எம் ஒட்டுமொத்த ஆன்மாவையும் பாதித்த மே 18 ஐ தமிழ் தேசிய துக்க நாளாக நாம் அனைவரும் கடைப்பிடிப்போம்.

ஏற்கனவே வட மாகாண சபையால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில் இதனை உணர்வுபூர்வமாக தமிழர் தாயகமெங்கும் அனுட்டிக்க தமிழ் தேசிய சக்திகளோடு கலந்தாலோசித்து ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அழைப்பு விடுக்கின்றது.

இந்த நாளில் முள்ளிவாய்காலில் சென்று நினைவேந்த கூடியவர்கள் வழமைபோன்று முள்ளிவாய்கால் பொது கட்டமைப்பு ஒழுங்கு செய்த நிகழ்வுகளில் பெருந்திரளாக பங்கேற்குமாறு வேண்டி நிற்கின்றோம்

அதே நேரம் அங்கு செல்லமுடியாதவர்கள் தங்கள் பிரதேச வழிபாட்டுத்தலங்களில் ஒன்றுகூடி பிரார்த்தனைகளை மேற்கொள்ளவும் வேண்டுகின்றோம்.

அன்றைய தினம் அனைத்து தமிழர் வணிக வளாகங்கள் பொது இடங்களில் கறுப்புக் கொடிகளை பறக்கவிடுமாறும் கறுப்புப் பட்டியுடன் கடமைகளில் ஈடுபடுமாறும் கோருகின்றோம்.

எமது தெருக்களை பொது இடங்களை வீட்டின் முன்னுள்ள வீதியோரங்களை துப்பரவு செய்வதுடன் அனைத்து கேளிக்கை நிகழ்வுகளையும் தவிர்த்து முள்ளிவாய்கால் கஞ்சியை ஒரு நேர உணவாகவேனும் உண்பதற்கு ஒவ்வொரு தமிழ் குடும்பமும் முன் வருவோம்.

மேலதிக தனியார் கல்வி நடவடிக்கைகள் அனைத்தையும் அன்றைய தினம் முழுமையாக நிறுத்தி எம் இளையோருக்கு எம் வலிகளின் ஆழத்தை சாத்வீகமாக உணர்வபூர்வமாக வெளிப்படுத்துவோம்.

பல்கலைக்கழக மாணவர் ஏற்பாடு செய்துள்ள இந்த காலப்பகுதிக்கான இரத்ததான முகாம்களில் பங்கேற்போம். வலி சுமந்த குடும்பங்களிற்கு மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஆறுதல் அளிப்போம்.

இந்த தமிழ்த்தேசிய துக்க நாளில் ஒட்டுமொத்த தமிழராய் நிலத்திலும் புலத்திலும் எம் உச்சபட்ச ஆத்மார்த்த உணர்வை அமைதியாக உறுதியாக வெளிக்காட்டுவோம்.
அதற்காக அனைவரும் திடசங்கற்பம் பூணுவோம் – என்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.