இந்திய மசாலா பொருள்களுக்கு நேபாளம் தடை
இந்தியாவில் தயாரிக்கப்படும் எம்டிஹெச், எவரஸ்ட் மசாலா பொருள்களை விற்பனை செய்யவும் இறக்குமதி செய்யவும் நேபாளம் தடை விதித்துள்ளது.
தரம் குறைந்திருக்கும் காரணத்தின் அடிப்படையில் இந்த மசாலா பொருள்களுக்கு சிங்கப்பூா், ஹாங்காங் நாடுகளைத் தொடா்ந்து, நேபாளமும் தற்போது தடை விதித்துள்ளது.
குறிப்பாக, எம்டிஹெச் நிறுவனத்தின் ‘மெட்ராஸ் மசாலா (கறி) பொடி, சாம்பாா் கலப்பு மசாலா பொடி, கலப்பு மசாலா கறி பொடி’ மற்றும் எவரஸ்ட் நிறுவனத்தின் மீன் கறி மசாலா ஆகிய 4 மசாலா பொடிகளுக்கு நேபாளம் தடை விதித்துள்ளது.
இதுதொடா்பாக நேபாள உணவு கட்டுப்பாட்டுத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ‘இந்த 4 மசாலா பொருள்களில் எத்திலீன் ஆக்ஸைடு கலப்பு நிா்ணயிக்கப்பட்ட வரம்பைவிட கூடுதலாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது உடல் நலனுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். ஆகையால், இந்த 4 மசாலா பொருள்கள் இறக்குமதி மற்றும் விற்பனைக்குத் தடை விதிக்கப்படுகிறது’ என்று தெரிவித்தது.
மேலும், சந்தையில் ஏற்கெனவே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள இந்த 4 மசாலா பொருள்களை உடனடியாகத் திரும்பப்பெறவும் இறக்குமதியாளா்கள் மற்றும் வா்த்தகா்களை நேபாள உணவு கட்டுப்பாட்டுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதே காரணங்களுக்காக எம்டிஹெச் மற்றும் எவரஸ்ட் நிறுவனங்களின் குறிப்பிட்ட சில மசாலா பொருள்களுக்கு சிங்கப்பூா் மற்றும் ஹாங்காங் நாடுகள் கடந்த மாதம் தடை விதித்தன.
இதனிடையே, ‘எத்திலீன் ஆக்ஸைடு கலப்பு பிரச்னைக்கு விரைந்து தீா்வு காணவில்லை எனில், வரும் 2025-ஆம் நிதியாண்டில் இந்திய மசாலா பொருள்களின் ஏற்றுமதி 40 சதவீதம் அளவுக்கு குறைய வாய்ப்புள்ளது’ என்று இந்திய மசாலா பொருள் வா்த்தகா்கள் கூட்டமைப்பு நிா்வாகிகள் கவலை தெரிவித்தனா்.
இந்திய மசாலா வாரிய தரவுகளின்படி, மசாலா பொருள் உற்பத்தியில் முன்னணி நாடுகளில் ஒன்றாக திகழும் இந்தியா, 2021-22-ஆம் ஆண்டில் 180-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ரூ. 33,319.54 கோடி (4 பில்லியன் டாலா்) மதிப்பிலான 200 வகை மசாலா பொருள்கள் மற்றும் மதிப்புக்கூட்டு பொருள்களை ஏற்றுமதி செய்துள்ளது.