தமிழ் மக்களுக்கான கடமையை மறுக்கும் மேற்குல ராஜதந்திரிகள் : மனோ கணேசன் குற்றசாட்டு
தமிழ் மக்கள் தொடர்பில் மேற்கு நாட்டு ராஜதந்திரிகள் தனது கடமையை சரியாக செய்யவில்லையென தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் (Mano Ganeshan) குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “வருடா வருடம் முரண்பாடுகள் மற்றும் கைதுகள் ஏற்படாமல் இறந்து போன கொல்லப்பட்ட தமது உறவுகளை நினைத்து நினைவேந்தலை நடத்துவதற்கான உரிமையை இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு உறுதிபடுத்த சர்வதேச சமூகம் தவறி விட்டது.
இந்த குறைந்தபட்ச உண்மையை இலங்கை ஆட்சியாளர்கள் தலையில் புகுத்துவதற்கு யுத்தம் முடிந்து 15 வருடங்கள் ஆகி விட்டது.
இருப்பினும், இது குறித்து திட்டவட்டமாக இலங்கை அரசாங்கத்திற்கு உரிய முறையில் சர்வதேச கமூகத்தால் மற்றும் ஐக்கிய நாடுகளால் உறுதியாக சொல்லப்படவில்லை, இதுவே இங்கு பிரச்சினை.
அன்று அகோர யுத்தத்திற்கு முழுமையான ஆதரவு ஒத்துழைப்புகளை அன்றைய இலங்கை அரசுக்கு வழங்கிய சர்வதேச சமூகம், தமிழர்களை பார்த்து யுத்தம் முடிந்த உடனேயே அரசியல் தீர்வையும் மற்றும் பொறுப்பு கூறலையும் பெற்று தருவதாக தமிழ் மக்களின் பிரதிநிதிகளிடம் உறுதி கூறியது” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.