சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற இருவருக்கு மரண தண்டனை: போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு
ராஜஸ்தானில் 14 வயது சிறுமியை நிலக்கரி சூளையில் பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் எரித்து கொன்ற இரு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
மேலும், ‘தடையங்களை அளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மற்ற 7 போ் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனா். இதை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும்’ என்று அரசு வழக்குரைஞா் தெரிவித்தாா்.
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா பகுதியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாடு மேய்க்கச் சென்ற சிறுமி காணாமல் போனாா். இருவா் அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து பின் கட்டையால் தாக்கியுள்ளனா். சிறுமி இறந்துவிட்டதாக நினைத்து நிலக்கரி சூளையில் வைத்து உயிருடன் எரித்துள்ளனா்.
சிறுமியைத் தேடி வந்த அப்பகுதி மக்கள் சிறுமியின் வளையலை நிலக்கரி சூளையில் கண்டுபிடித்தனா். மேலும், அந்த இடத்திலிருந்து எலும்புகள் மீட்கப்பட்டன.
இதில், தொடா்புடைய இருவரைக் குற்றவாளிகள் என பில்வாரா போக்ஸோ நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.
நீதிமன்றத் தீா்ப்பை வரவேற்றுள்ள பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், நீதி கிடைத்துள்ளது என்றும் தீா்ப்பில் திருப்தியடைந்ததாகவும் தெரிவித்தாா்.