கொழும்பில் இருந்து யாழுக்கு பொதியில் அனுப்பப்பட்ட ஹெரோயின் – பெண் உள்ளிட்ட மூவர் கைது
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட பொதி ஒன்றினுள் போதைப்பொருளை மிக சூட்சுமமாக அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவருக்கு தனியார் நிறுவனம் ஒன்றின் பொதிகள் சேவைகள் ஊடாக, சேலை உள்ளிட்ட உடுப்புடவைகள் அடங்கிய பொதி ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பொதியினுள் சூட்சுமமான முறையில் ஹெரோயின் போதைப்பொருளையும் மறைத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் பொதியினை பெற்றுக்கொண்டவர் மற்றும் அதற்கான பணத்தினை வழங்கிய பெண் உள்ளிட்ட இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் மீட்டு இருந்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , கொழும்பில் இருந்து அவர்களுக்கு பொதியினை அனுப்பி வைத்த நபரை கொழும்பில் வைத்து கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் முற்படுத்தி , பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுக்க அனுமதி பெற்று , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.