அனர்த்த நிலைமைகள் தொடர்பில் வெளியான புதிய தகவல்
அனர்த்த நிலைமைகள் குறைவடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி (Pradeep Kodippili) தெரிவித்துள்ளார்.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பல அனர்த்த நிலைமைகள் பதிவாகியுள்ளதுடன், நாடு முழுவதிலும் உள்ள சுமார் 220 மாவட்ட செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தற்போது, 10 பாதுகாப்பான இடங்கள் மட்டுமே உள்ள நிலையில் மொத்தம் 226 பேர் இந்த இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
8 பேர் உயிரிழப்பு
நேற்றைய நிலவரப்படி, சீரற்ற காலநிலையால் 47,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆனால், இன்று (29) அந்த எண்ணிக்கை 34,000 ஆகக் குறைந்துள்ளது.
இதேவேளை, காலி, இரத்தினபுரி, புத்தளம், நுவரெலியா மற்றும் பதுளை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமைச்சரின் அறிவுறுத்தலைப் பின்பற்றி, பாதுகாக்கப்படாத அனைத்து மரங்களையும் அகற்றும் திட்டத்தை ஆயுதப்படைகளின் உதவியுடன் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தொடங்கியுள்ளது.
நிவாரணப் பணிகள்
மேலும், குருநாகல் மாவட்டத்தில் தெதுரு ஓயா நீர்த்தேக்கம், கண்டி பொல்கொல்ல நீர்த்தேக்கம், லக்ஷபான நீர்த்தேக்கம் மற்றும் குகுலே கங்கை ஆகியவற்றின் பல வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நீர்த்தேக்கங்களிலிருந்து நீரைப் பயன்படுத்துவோர், நீர் மட்டம் திடீரென அதிகரிப்பதால் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், நிவாரணப் பணிகள் தொடர்பான தகவல்களைப் பெற மக்கள் 117 மூலம்அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் தொடர்பில் இருக்குமாறு கொடிப்பிலி கேட்டுக் கொண்டார்.