கனடாவில் தற்காலிக குடியிருப்பாளர்களுக்கு வெளியான முக்கிய தகவல்
கனடாவில் (Canada) தற்காலிக குடியிருப்பாளர்களுக்கு காவல்துறை சான்றிதழ் தேவை என தாம் கூறவில்லை என்று அந்நாட்டு புலம்பெயர்தல் அமைச்சர் மார்க் மில்லர் (Marc Miller) தெரிவித்துள்ளார்.
கனடாவுக்கு வரும் சர்வதேச மாணவர்களின் விசா விண்ணப்பங்களை விலாவாரியாக சோதிக்கவேண்டும் என கடந்த மே மாதம் 6ஆம் திகதி கனேடிய புலம்பெயர்தல் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
அத்துடன், அவர்களுக்கு குற்றப் பின்னணி இருந்தால், அவர்கள் கனடாவுக்குள் நுழைய முடியாது என்றும் கூறியிருந்தார்.
காவல்துறை சான்றிதழ்
இந்நிலையில், இது தொடர்பில் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரான அர்பன் கண்ணா (Arpan Khanna) நாடாளுமன்ற குடியுரிமை மற்றும் புலம்பெயர்தல் நிலைக்குழு முன் கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இதனை தொடர்ந்து, அவருக்கு பதிலளித்த மார்க் மில்லர், தற்காலிக குடியிருப்பாளர்களுக்கு காவல்துறை சான்றிதழ் தேவை என நான் ஒருபோதும் சொல்லவில்லை என தெரிவித்துள்ளார்.
கைரேகை சோதனை
மேலும், அரசு கைரேகை போன்ற அடையாளங்களை சோதிப்பதாகவும் ஆனால், தற்காலிக குடியிருப்பாளர்களுக்கு வழக்கமாக காவல்துறை சான்றிதழ் தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சில அதிகாரிகள், பாதுகாப்பு சோதனையின்போது காவல்துறை சான்றிதழ் தேவை என கருதும் பட்சத்தில் மட்டுமே அவை தேவைப்படலாம் என அமைச்சர் கூறியுள்ளார்.