விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு 2.5 பில்லியன் ரூபா : வெளியான அறிவிப்பு
விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டுக்கான நெற்செய்கைக்கான பயிர்ச்செய்கை மானியமாக 2.5 பில்லியன் ரூபா விவசாயிகளின் கணக்குகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, 213771 விவசாயிகளுக்கு 2.5 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை விவசாயிகளின் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது.
மானியம் வழங்கப்பட்ட நெல் அளவு 167,362 ஹெக்டேர் ஆகும். இவ்வருடம் சுமார் 450,000 ஹெக்டேயர் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன், பயிரிடப்படும் அனைத்து நெற்பயிர்களுக்கும் சுமார் 7.5 பில்லியன் ரூபா நிதி மானியமாக வழங்கப்படும் என கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
விவசாயிக்கு 15,000 ரூபா
விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர 2024 ஆம் ஆண்டுக்கான பருவத்தில் நெற்செய்கை மேற்கொள்ளும் ஒவ்வொரு விவசாயிக்கும் ஹெக்டேயருக்கு 15,000 ரூபா வீதம் வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்பித்த நிலையில், அதற்கு அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துள்ளது.
இதேவேளை, நெற்பயிர்களுக்கு யூரியா உரம் மாத்திரமே இடப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், எம்ஓபி அல்லது பூந்தி உரங்களை இடாததால் காய்கள் மற்றும் நெற்பயிர்கள் முழுமையடையாது விளைச்சல் குறைய வாய்ப்புள்ளதாக விவசாய திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.