விமானங்கள் குலுங்குவது இனி அதிகரிக்கும்… எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்கள்
இனி பாதுகாப்பான பயணம் என்பது அரிதானது என்றும் விமானங்கள் குலுங்குவது அதிகரிக்கும் வாய்ப்புகளே அதிகம் எனவும் நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீட்பெல்ட் கட்டாயம்
விமானத்துறை சார்ந்த நிபுணர்கள் தற்போது பயணிகளுக்கு சீட்பெல்ட் கட்டாயம் என்பதையும், விமானம் குலுங்கும்போது விமானிகளின் அறிவுரைகளை மதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
காலநிலை மாற்றம் காரணமாக விமான பயணம் என்பது பாதுகாப்பானதாக இருக்குமா என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது. விமானிகளின் அறிவுறுத்தல்களை கண்டுகொள்ளாத பயணிகளே விமானம் குலுங்கும் போது பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என்ற கருத்தையும் விமான ஊழியர்கள் முன்வைக்கின்றனர்.
211 பயணிகளுடன் லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட விமானம் பர்மா மீது பறந்த நிலையில், குலுங்கியுள்ளது. மே 21ம் திகதி நடந்த இச்சம்பவத்தில் பலர் காயங்களுடன் தப்பிய நிலையில், 73 வயதான பயணி ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்தார்.
5 நாட்களுக்கு பின்னர் தோஹாவில் இருந்து டப்ளினுக்கு கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்த 12 பேர் காயமடைந்தனர். இந்த நிலையிலேயே இனி விமானங்கள் குலுங்குவது அதிகரிக்குமா என்ற கேள்வியுடன், காலநிலை மாற்றம் காரணமா என்றும் விவாதிக்கப்படுகிறது.
55 சதவீதம் அதிகரித்துள்ளதாக
நிபுணர்கள் தரப்பு காலநிலை மாற்றம் காரணமாகவே விமானம் குலுங்குவது அதிகரித்துள்ளது என நம்புகின்றனர். 2009 முதல் 2018 வரையில் விமானம் குலுங்கியதால் 111 பேர்கள் மோசமாக காயமடைந்துள்ளனர்.
இந்த காலகட்டத்தில் ஒருவர் மட்டுமே மரணமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், 2023ல் வெளியான ஒரு ஆய்வறிக்கையில் கடந்த நான்கு தசாப்தங்களில் வட அட்லாண்டிக் விமான வழித்தடத்தில் இதுபோன்ற விமானம் குலுங்கும் சம்பவங்கள் 55 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, மற்றும் தெற்கு அட்லாண்டிக் போன்ற பரபரப்பான விமானப் பாதைகளும் இது போன்ற சிக்கலை சந்திப்பதாக நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
ஆனால் எந்த வழித்தடத்தில் எப்போது இது போன்ற விமானம் குலுங்கும் சம்பவங்கள் நிகழும் என்பதை கணிப்பது மிக மிக சவாலானது என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதனால் இனி விமானப் பயணங்களில் கட்டாயம் சீட்பெல்ட் அணிய வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளதாக கூறுகின்றனர்.