அதிபர் ரணிலின் உத்தரவை உதாசீனப்படுத்தும் அரச அதிகாரிகள்
வவுனியாவில் மக்களுக்காக காடுகளை விடுவிப்பு செய்யுமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்த போதிலும் அதிபரின் உத்தரவை சில அரச அதிகாரிகள் உதாசீனப்படுத்துவதாக வவுனியா அபிவிருத்தி குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கு. திலீபன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அபிவிருத்தி குழு அலுவலகத்தில் நேற்றையதினம் (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், “ அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து நான் தொடர்ச்சியாக கொடுத்த அழுத்தத்திற்கு அமைவாக வவுனியா மாவட்டத்தில் வனவள திணைக்களத்திடம் இருந்து பல்லாயிரக்கணக்கான காணிகளினை விடுவிப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
காணி விடுவிப்பு
ஆனால் அதிபரின் வேலை திட்டத்தினை மதிக்காமல் செயற்படும் சில அரச அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் மக்களுகக்கான இந்த விடயத்தில் கீழ் மட்ட அரச உத்தியோகத்தர்களின் மீது மறைமுக அழுத்தத்தினை பிரயோகிப்பது வேதனையான விடயமாகும்.
குறிப்பாக இந்த ஊடக சந்திப்பினை மேற்கொண்டதன் நோக்கமானது இவ்விடயத்தினை கிராம சேவையாளர்களிடம் தெரியப்படுத்துவதற்காகவே.
ஏன் எனில் வனவள அதிகாரிகளுடன் இணைந்து கிராம சேவையாளர்கள் காணி விடுவிப்பு செய்வதற்கான இடங்களை பார்வையிட்டு அதற்குரிய அனுமதி அளிப்பதற்கான செயற்பாட்டில் ஈடுபடுவதாக காண்பிக்கப்படுகின்றது.
காணி ஆக்கிரமிப்பு
உங்களுடன் இணைந்து காணி விடுவிப்பதற்குரிய இடங்களை அடையாளப்படுத்தும் போது நாங்கள் உங்களுடன் இணைந்து அடையாளப்படுத்திய மக்களிற்கான காணிகளை ஆக்கிரமிப்பதற்கு வனவள திணைக்களத்திற்கு இடமளிக்க வேண்டாம்.
மாறாக எல்லைக்கற்கள் போடாமல் இடத்தினை பார்வையிடுகிறோம் என கூறி உயிர் மரங்களில் அடையாளமிட்டு அவ்விடத்தில் ஜிபிஎஸ் எடுத்து அதனை வர்த்தமானி அறிவித்தலாக வெளியிட வனவள திணைக்களமும் வவுனியாவில் உள்ள சில அதிகாரிகளும் நடவடிக்கையெடுத்திருக்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.