பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்றுள்ள மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
கல்விப் பொது தர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளிவந்துள்ள நிலையில், பல்கலைக்கழகத்துக்கான அனுமதி கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் 1.8 வீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று பாடங்களிலும் A பெற்றுக்கொண்ட மாணவர்களின் எண்ணிக்கையும் கடந்த வருடத்தை விட 510 ஆல் அதிகரித்துள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த(Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.
சமய நிகழ்வொன்றின் பின்னர் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் நேற்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறந்த முன்னேற்றம்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
இம்முறை கல்வி பொதுத் தர உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், முதல் 10 மாணவர்களில் ஐந்து பேர், தென் மாகாணத்திலிருந்தே தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
ஏனைய ஐந்து பேர் நாடளாவிய ரீதியிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். ஒப்பீட்டளவில் இது சிறந்த முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகிறது.
வழமையாக பெறுபேறுகளின் அடிப்படையில் தென் மாகாணத்திலேயே முதலாவது மாணவர் தெரிவு செய்யப்படுவார். இம்முறை இது மேலும் முன்னேற்றமடைந்துள்ளது. இதற்காக நான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இம்முறை பரீட்சை பெறுபேறுகள் வெளியான தினத்தில், ஆசிரியர் தொழிற்சங்கம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டது.எனினும் அப்போராட்டம் தோல்வியடைந்துள்ளது.
தவணைப் பரீட்சை
75 வீதமான பாடசாலைகள் வழமை போன்று இயங்கின. நாம் திட்டமிட்டபடி அனைத்து பாடசாலைகளிலும் தவணைப் பரீட்சைகளையும் நடத்த நடவடிக்கை எடுத்தோம்.
கல்வியமைச்சர் என்ற வகையில் நான், அனைத்து ஆசிரியர் தொழிற்சங்கங்களிடமும் கேட்டுக் கொள்வது; பெரியவர்களாகிய நமது பிரச்சினைகளுக்கு நாம் தீர்வு பெற்றுக் கொள்வோம். அதற்காக மாணவர்களை பலிக்கடாக்ளாலாக்க வேண்டாம்.அந்த வகையில் இம்முறை பெறுபேறுகள் தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.